சென்னை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய நோய் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இன்று (ஆக. 21) மதியம் காலமானார். இதனையடுத்து, சவுகார் ஜானகியின் மறைவுக்கு நாட்டின் மூத்த தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழம்பெரும் நடிகை 'பத்மஸ்ரீ' திருமதி சவுகார் ஜானகி அம்மையார் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றபோதிலும், தமிழில் அறிமுகமான வளையாபதி திரைப்படத்திலயே பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வரிகளைச் சிறப்பாக உச்சரித்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கவனத்தை ஈர்த்தவர் திருமதி சவுகார் ஜானகி அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களின் வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் இத்திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 380-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவரது நீண்ட திரைப்பயணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். பேரறிஞர் அண்ணா, என்.டி.ஆர். எனப் பல முதலமைச்சர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களின் மீது அளவுகடந்த மரியாதை கொண்டவராக இருந்து, எங்கள் குடும்பத்தினரோடும் நட்போடு பழகிய சிறந்த மனிதப் பண்பைக் கொண்டவராக சவுகார் ஜானகி அவர்கள் திகழ்ந்தார். புதிய பறவை, நீர்க்குமிழி, பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு என நீண்டுகொண்டே போகும் அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களின் மனதில் அவர் என்றும் புகழோடு வாழ்வார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/soukar-janaki-was-the-best-at-speaking-dialogues-in-tamil-mk-stalins-condolences




