திருத்தி அமைக்கப்பட்ட திட்டத்தில் சேர்ப்புF-Saddle (F-சாடில்) உபரி நீர் வெளியேற்ற அமைப்பு ஆரம்ப காலத்தில் "கர்னல் எல்லீஸ்" வடிவமைத்த மேட்டூர் அணை திட்டத்தில் அதிகபட்ச உபரி நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,53,100 கன அடி என்று மதிப்பிடப்பட்டிருந்தது என்று நாம் முன்பே கண்டோம். 1924-ல் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின் படி திட்ட மதிப்பீடு செய்யப்பட்ட போதும் இந்த அளவு மாற்றத்திற்கு உண்டாகவில்லை. ஆனால், 1924-ல் ஏற்பட்ட பெருவெள்ளம், இந்த மதிப்பீட்டினை மாற்றி அமைக்க கட்டாயப்படுத்தியது. இயற்கை நமக்கு ஒரு நல்ல வாய்ப்பை நல்கியது என்றே உணரமுடிகிறது. ஜூலை 1924 -ல், மேட்டூரில் காவிரியின் நீர் வெளியேற்றம் விநாடிக்கு 4,56,000 கன அடியாக இருந்தது என்று பதிவு செய்யப்பட்டதையும் நாம் அறிந்துள்ளோம் அணையின் இடதுபுறத்தில் அமைக்கப்பட்ட "எல்லீஸ் பாலம்" மட்டுமன்றி அணையின் வலது புறம் F-Saddle (F-சாடில்) எனப்படும் ஓர் உபரி நீர் வெளியேற்ற அமைப்பு திருத்தி அமைக்கப்பட்ட திட்டத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது. ஆனால், 1933 வரை இந்த அணையின் வலது புற திட்டம் எந்த செயல் திட்டமாகவும் ஆரம்பிக்கப்படாமல்தான் இருந்தது. சில கோப்புகளை ஆராய்ந்த போது பல தகவல்கள் இது குறித்து வெளிச்சத்தை வீசுகின்றன. இந்த பகுதியில் ஏராளமான கட்டடக்கலை சமன்பாடுகள் குறித்து விளக்கமும் அதை மேட்டூர் அணையில் எப்படி பொருந்துகிறது எனவும் அதனால் உபரி நீர் வெளியேற்றம் குறித்தும், அது குறித்த தடுப்பணை குறித்தும் வெவ்வேறு காலங்களில் எவ்வாறு மாற்றம் பெற்றது என்ற அடிப்படை கோட்பாடுகள் குறித்தும் காணக் கிடைத்தாலும், அவை முழுவதும் டெக்னிக்கல் மற்றும் சமன்பாடு விஷயங்களாக இருப்பதால், முக்கியமான கருத்துக்களை மட்டும் நாம் உள்வாங்குவது இது குறித்து புரிந்து கொள்வதற்கு போதுமானதாக இருக்கும். ஆற்றில் பெருவெள்ளம் 1. தலைமைப் பொறியாளர் பதவி வகித்த திரு. முல்லிங்க்ஸ், கணித சமன்பாடுகளின் படி 1927 -ல் எல்லிஸ் உபரி நீர் அமைப்பு போதுமானதாக இருக்கும் என்று முடிவெடுத்தார். 2. 1929 -ல் அவர் ஆலோசனை தலைமை பொறியாளராக (Consulting Chief Engineer) பணியாற்றும் போது, 5 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் ஏற்பட தேவையான ஏற்பாடுகள் செய்வது அணைக்குப் பாதுகாப்பானது என்ற முடிவுக்கு வந்தார். 3. விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் வகையில் எப்-சாடில் எனப்படும் தடுப்பணை சுவர், அணையின் மேற்கு கரையில் கட்டுவது மிகுந்த பாதுகாப்பானது என்று முன்மொழிந்ததோடு அவருக்கு பின் அப்பொறுப்பை ஏற்கப் போகும் திரு.ஹார்ட் (HART) முடிவெடுப்பது சாலச் சிறந்தது என்றும் கூறினார்! 4. நாம் நமக்குத் தெரிந்த சூழ்நிலைகளில் மட்டுமல்ல, எல்லா விதத்திலும் ஏற்படக்கூடிய காரண சூழ்நிலைகளிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய அவசியத் தேவை இருக்கிறது என்ற பெரும் சிந்தனையின் வெளிப்பாடாக இப்படிக் கூறினார். 5. மேட்டூருக்கு மேல் புறம் அதாவது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புயல் மற்றும் பெருமழை ஏற்பட வாய்ப்புள்ளதா? என கண்காணிப்பு பொது இயக்குநர் அலுவலகத்திடம் யோசனை கேட்கப்பட்டது. சரியாக இது குறித்து கூற முடியாது எனினும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் புயல் காரணமாக பெருமழை ஏற்பட பின்னாட்களில் வாய்ப்புள்ளது என்ற அறிக்கை அங்கிருந்து பெறப்பட்டது. 6. 1930-ம் வருடம் மே மாதம் முல்லிங்ஸ் பலவிதமான கருத்துக்களை ஆராய்ந்து 1924-ல் ஏற்பட்ட வெள்ளத்தின் அளவுக்கு அதிகமாக 25 விழுக்காடு அதாவது விநாடிக்கு 5,70,000 கன அடி நீர் வெளியேற்றம் ஏற்பட வசதி இருக்க வேண்டும் என்றும் அணையின் வலது கரையில் F-SADDLE எனும் தடுப்பு அணை கட்டப்பட வேண்டும் என்றும் முடிவு செய்து கூறிவிட்டார். சில நாட்கள் எந்த முடிவும் அடுத்து வந்த தலைமை பொறியாளர் ஹர்ட் (HART) எடுக்கவில்லை. இதே கேள்வியை அப்போது சூப்பரின்டெண்டன்ட் இன்ஜினியராக இருந்த "பார்பர்" மறு ஆராய்ச்சி செய்தார். அப்போது மெட்ராஸ் மாகாண தலைமைப் பொறியாளராக பொறுப்பு வகித்த திவான் பகதூர் ஆர். நரசிம்ம அய்யங்கார் மிகச் சரியான வெளியேற்ற அளவு குறித்து அறுதியிட்டு கூற முடியாததால், திரு.முல்லிங்ஸ் பரிந்துரைத்த அளவின்படி வடிவமைப்பது உசிதம் என்ற கருத்தை பதிந்தார். சரித்திரப் பதிவுகள்நீர் வெளியேற்றம் காவிரியில் அதுவரை அதிகபட்சமாக எந்த அளவு நீர் வெளியேறி இருக்கிறது என்ற விவரங்கள் குறித்து ஆராயப்பட்டது. சரித்திரப் பதிவுகள் கீழ்க்கண்டவாறு விவரங்களை அளித்தன! 1896 -ல் 3,13,000 கன அடி 1911 -ல் 3,57,360 கன அடி 1924 -ல் 4,62,500 கன அடி என்ற அளவில் நீர் வெளியேற்றம் மேலணையில் இருந்து பெறப்பட்டது. எனில், காவிரி ஆற்றின் வழியெங்கும் வீணான நீரின் அளவையும் சேர்த்தால் விநாடிக்கு 4,88,000 கன அடி, காவிரி ஆறு இதுவரை ஒட்டு மொத்த வரலாற்று பூர்வமாக வெளியேற்றி இருக்கிறது எனலாம்! எனவே, 1924 -ல் ஏற்பட்ட பெருவெள்ள அளவில் இருந்து 25 விழுக்காடு சேர்த்து, கூட கணக்கிடுவது பொருத்தம் எனவும் முடிவு செய்யப்பட்டது. எல்லீஸ் பாலம் மைசூரில் அந்த சமயத்தில் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் அதிகபட்ச நீர் வெளியேற்றம் விநாடிக்கு 2,90,000 கன அடி என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் விநாடிக்கு 3,50,000 கன அடிக்கு உபரி நீர் வெளியேற்ற வழி வகைகள் அங்கு செய்யப்பட்டிருந்தன. மேற்கண்ட அனைத்து அம்சங்களை உள்ளடக்கி ஆராய்ந்து பார்த்து, விநாடிக்கு 5,70,000 கன அடி வெளியேற்றத்திற்கு தகுந்த ஏற்பாடுகள் இல்லை என்றால் மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பும்போது அதாவது +800 MSL என்ற அளவை தாண்டும்போது தேங்கி நிற்கும் நீரின் மேலே ஏற்படும் அலைகளின் வேகத்தால் அணைகளின் மேல் புறத்தில் அமைந்திருக்கும் தடுப்புச் சுவரில் (Parapet wall) அடித்து மோதும் வாய்ப்பு ஏற்படலாம். அணையின் மேல் புறத்தில் இருந்து நீர்வழியும் நிலையும் ஏற்படலாம். மற்றும் அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு எனவும் கருத்தில் கொள்ளப்பட்டது. இதனால் F-Saddle எனும் தடுப்பு சுவர் கட்டுவதென முடிவெடுத்து அதற்கான இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டது. எல்லீஸ் பாலம், பாசனக் கால்வாய் மற்றும் காவிரி ஆற்றில் விநாடிக்கு 3,16,000 கன அடி உபரி நீர் வெளியேற்றத்திற்கு அதிகமான நீர் வெளியேற்றம் தேவைப்படும்போது அணையின் வலது புறத்தில், எப்-சேடில் வழியாக நீர் வெளியேற்றம் செய்ய வழி வகுக்கப்பட்டது. இந்த அமைப்பு குறித்து பொறியாளர்கள் மற்றும் சில முக்கியஸ்தர்களை தவிர பெரும்பாலானோருக்கு அதன் முழு அம்சம் இன்னமும்கூட புரிந்திருக்க வாய்ப்பில்லை! ஏனெனில், அணையின் வலது புறத்தில் தற்போது கட்டப்பட்டிருப்பது ஒரு தடுப்புச் சுவர் மட்டுமே என்ற அளவில் மட்டுமே புரிதல் உள்ளது. ஆனால், இந்த F- சேடல் ஓர் அற்புதமான அணை பாதுகாப்பு அம்சம். இந்த நூற்றாண்டில் எல்-நினோ, லா-நினோ போன்ற பருவகாலங்களுக்கும் உகந்த பாதுகாப்பு அம்சம் இதில் பொதிந்துள்ளது. தோராயமாக, விநாடிக்கு 6 லட்சம் கன அடிக்கு நீர் வரத்து இருந்தாலும், இந்த அமைப்பு மூலம் நீர் வெளியேற்றம் செய்து அணையின் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்பதே இதன் சிறப்பு! நீர் மிக அதிகமாக வரும் காலங்களில் அணையின் வலது கரையில், மேட்டூரிலிருந்து கொளத்தூர் செல்லும் சாலையிலிருந்து காணக்கிடைக்கும் இந்த தடுப்பு அரணை எளிதாக உடைத்து நீர் வெளியேற்றம் செய்து முக்கிய அணையின் பாதுகாப்பை உறுதி செய்து விட இயலும் ஓர் அருமையான பொறியியல் அற்புதம். மிகக் குறைந்த செலவில் இந்த அமைப்பை வடிவமைத்த பொறியாளர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். வெள்ளப்பெருக்கால் அணையின் மீது வழிந்தோடும் நீர்(1933) 1934-ல் இந்த வேலையை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு ரூபாய் 1,15,983 செலவில் கட்டி முடிக்கப்பட்டது. அந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வேலை முடிக்கப்பட்டது. 7 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் மூலம் இந்த F-Saddle, 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்ற துணை புரியும். பருந்துப் பார்வையில் நோக்கினால் நீர் வெளியேறும் பாதைகள் என 16 கண் எல்லீஸ் பாலம், பழைய நீர் மின் திட்ட அலகுகள் 4, கீழ்மட்ட கால்வாய் 5 அலகுகள், உயர் மட்ட கால்வாய் 8 அலகுகள், F - SADDLE எனப்படும் உபரி நீர் வெளியேற்ற அமைப்புகள் அணையின் பாதுகாப்புக்கு கட்டியம் கூறுவது விளங்கும். பின்னாளில் சேர்க்கப்பட்ட புதிய மின் நிலைய 4 அலகுகளும் செயல்பாட்டில் இணைந்தன. இவை அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் அரண்கள்! தடுப்பணை மற்றும் நீர் திருப்பிகள் தொடர்ந்து ஆற்றில் நீர் ஓடிக்கொண்டே இருக்கும் போது குறுக்காக எப்படி அணை கட்டப்பட்டது என்ற கேள்வி அணையை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் எழும். இதற்கு மிக கவனமாக முன்கூட்டிய திட்டமிடுதல் காரணம் என்கின்றனர் பொறியாளர்கள். மிகச் சரியான தரவுகள், வெள்ளம் ஏற்படும் கால நேரங்கள், ஆறு நீரின்றி வறண்டு கிடக்கும் நாட்கள் போன்ற விவரங்கள் அணை கட்டுவதற்கு முன்பாக ஒரு பொறியாளருக்கு முக்கியமாக தேவைப்படும் விவரங்கள் ஆகும். River bed எனப்படும் ஆற்றுப் படுகை இருப்பதிலேயே மிக தாழ்ந்த பகுதி. இந்த பகுதியில் தொடர்ந்து நீர் ஓடிக்கொண்டே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் கட்டடம் எழுப்ப வேண்டிய நேரத்தில் அங்கு ஓடும் நீரை மடை மாற்றி, வேறு திசையில் திருப்பி, மீண்டும் ஆற்றில் ஓடும் படி செய்திடல் வேண்டும். SPILLWAY பகுதி இறுதி கட்டுமானம் நாம் ஏற்கனவே கண்டபடி, குறைவான நீர், ஆற்றின் ஆழமான பகுதியில் ஓடும் போது அதை பிரித்து அல்லது வேறு திசைக்கு திருப்பியோ தேவையான அளவு இடத்தில் அணை சுவற்றுக்கு அடித்தள கான்கிரீட் மற்றும் கட்டட வேலை செய்து கொள்ளவோ வழி ஏற்படுத்த வேண்டும். இதற்காகத்தான் குறைந்த உயரத்தில் "காஃபர் டேம்" என்று சொல்லப்படும் "தடுப்பு அணைகள்" முதலில் கட்டப்பட வேண்டும். ஆற்றுப்படுகையில் ஒருபுறம் கான்கிரீட் கட்டுமானப் பணிகள் தரைமட்டம் அல்லது அதற்கு சற்று உயரமாக கட்டிக்கொண்டு வந்த பிறகு இந்த தடுப்பணை மூலம் நீரை மடைமாற்றம் செய்து அதன் வழியாக ஓடச் செய்து மற்றொரு பாதையில் அதே போல கான்கிரீட் வேலைகள் மற்றும் அடித்தளம் போடும் வேலைகள் செய்யப்படும். Construction sluices எனப்படும் "கட்டுமான உதவி மதகுகள்" நீரை திருப்பி விடுவதற்கு பயன்படுத்தப்படும். அதன்படி, மேட்டூர் அணையில் நீர் குழாய்கள் மேலிருந்து கீழ் பொருத்தப்பட்டு மேற்கண்டவாறு நீரை திசை திருப்பி அடித்தளம் இடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. பொதுவாக அதிக அளவிலான நீர் வராத ஜனவரி முதல் ஜூன் மாதங்கள் வரை நீர்ப்படுகையில் தேவையான வேலைகளை முடித்து வைத்து அதற்குப் பிறகு நீர் அதிகமாக வரும் போது அதன் வழியே அனுமதித்து, வேறு இடங்களில் அடித்தளம் இடுவது என்ற வேலை மாறி, மாறி தொடர்ந்து நடைபெற்றது. அணை கட்டுமானம் எப்படி நடைபெற்றது காஃபர் டேம் எனப்படும் தடுப்பணைகள் நல்ல ஆழத்துடன் அமைத்து கட்டுமான பணிகள் விரைவில் நடத்தி முடிக்க திட்டம் தீட்டி செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் "சீசன்" என சொல்லப்படும் நீர் அதிகமாக வந்த காலங்களில், வரிசைக் கிரமமாக அணை கட்டுமானம் எப்படி நடைபெற்றது என்பதை கீழே உள்ள விவரங்கள் தருகின்றன. 1. 1927-ல் வெள்ளப்பெருக்கு வந்த போது தடுப்பணை சுவர்கள் மட்டுமே எழுப்பப்பட்டிருந்தன. அடித்தளம் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் பெரும் கற்களை அகற்றிய நிலையில் தண்ணீர் பெரும்பாலும் அந்த சுவற்றின் மீது வழிந்து ஓடியது! 2. 1928ல் கடந்த வருடத்தை போலவே இருந்தாலும் தடுப்பணையின் உயரம் சற்று மேலே எழுப்பப்பட்டிருந்தது. அடித்தளத்திற்கு தோண்டிய குழிகளில் படிந்திருந்த பெரும் மணல் மற்றும் கற்களை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த வருடத்தில் அணையின் வலது புறத்தில் கற்களை வைத்து ஓரளவு அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தது. SPILLWAY வழியாக நீர் வெளியேற்றம் 3.1929 -ல் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவர் River bed அளவுக்கு உயர்த்தப்பட்டிருந்தது. ஜூன் 6ஆம் தேதி 1929 -ம் வருடம் அன்றைய தேதி வரை அடித்தள வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதற்கு அடுத்த நாள், அந்த இடம் முழுவதும் நீரால் மூழ்கியது! வெள்ளப்பெருக்கு ஆரம்பித்துவிட்டது! 4. தொடர்ந்து நீர் உயர்ந்து கொண்டே சென்ற காரணத்தால் பெரும் துன்பத்திற்கு இடையில் அங்கே வைத்திருந்த கான்கிரீட் கலவை இயந்திரங்கள் டிராம்வே ரயில் பாதைகள் மற்றும் இதரப் பொருட்கள் அனைத்தையும் வேறு பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 5. மேற்கண்ட வேலை, கிடைத்த குறுகிய நேரத்தில் (2-3 மணி நேரம்) செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் அந்த இடம் முழுவதும் நீரில் மூழ்கியது. 6. 1930 ஜூன் மாத கடைசியில் அந்த வருட வெள்ளம் வருவதற்கு முன்பாக தடுப்பணைகளின் சுவர்கள் நல்ல உயரத்துக்கு வந்துவிட்டது. Red Tower எனப்படும் (சிவப்பு கோபுரம்) கான்கிரீட் போடும் கோபுரம், அணையின் மேற்கு பகுதியில் ஓரளவு நிலை நிறுத்தப்பட்டது. 7. மத்தியில் அமைந்த தடுப்பணை வேலைகள் மிகவும் குறைவாகவே முடிக்கப்பட்டிருந்தன. 8. 1931 வெள்ளம் வருவதற்கு முன்பு அணையின் முழு நீளத்திற்கும் ஆற்றின் அடித்தளத்தில் இருந்து தேவையான அளவிற்கு அஸ்திவாரம் மேலே எழுப்பப்பட்டு விட்டது. சுமார் 10 லிருந்து 12 அடி உயரம் முடிந்தது. 9. ஏறத்தாழ ஒரு வருட காலமாக தொடர்ந்து இயங்கி வந்த சிவப்பு கோபுரம் மூலம், அணையின் வலது பக்கத்தில் ஆற்று மட்டத்திலிருந்து சுமார் 52 அடி உயரம் வரை கட்டடம் எழுப்பப்பட்டு விட்டது. 10. அணையின் இடது பக்க சுவர் எழுப்புதல் மெதுவான வேகத்திலேயே செல்ல முடிந்தது. காரணம், ஆற்றின் வெள்ளப் போக்கோடு போராட வேண்டியிருந்தது! 11. 1932-ல் வெள்ளம், குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே எதிர்பாராத விதமாக வந்தது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அரைகுறையாக கட்டி முடிக்கப்படாத சுவற்றில் நீர் விழுந்து, சில இடங்களில் சிறிய அளவில் சுவற்றின் கற்கள் சேதமடைந்தன. வெள்ளத்தில் மூழ்கிய காப்பணை ஆனால், சில மணி நேரங்களுக்கு முன்பாக கட்டி முடித்த சில இடங்களில், கற்கள் சேதமாகாமல் இருந்தது ஆச்சரியத்தை அளித்தது. இதற்கு காரணம் சுண்ணாம்பு கலவைக்கு பதிலாக கட்டிடம் கட்ட சிமெண்ட் பயன்படுத்தியதால் சேதம் தவிர்க்கப்பட்டது. சுண்ணாம்பு கலவையாக இருந்திருந்தால் ஒட்டுமொத்தமாக சுவர் அடித்துக் கொண்டு போய் இருக்கலாம். 12. 1933 ஆம் ஆண்டு மழை வெள்ளம் வருவதற்கு முன்பு மிக கவனமாக திட்டமிடல் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் அணைச்சுவற்றில் 630 அடி அளவுக்கு நீளவாக்கில் நீர் வழிந்தோட இடைவெளி மட்டுமே இருந்தது. அணைச் சுவரும் சுமார் 100 அடிகளுக்கு மேலாக உயரமாக கட்டப்பட்டு விட்டது. இந்த சமயத்தில் உபரி நீர் வெளியேற்ற மதகுகள் வழியாக வழிந்து ஓட தேவையான அளவுக்கு, தற்காலிக உபரி நீர் சேமிப்பு அணை உயரப்படுத்தி அதன் வழியாக வழிந்தோட வழிவகை செய்யப்பட்டது. வெள்ளம் உயரமான இடத்திலிருந்து வழிந்து ஓடும் போது அணை சுவற்றில் அடிப்பாகம் சேதம் அடையாமல் தடுக்க தேவையான வளைவுகள் ஏற்படுத்தி சுலபமாக வழிந்தோட வழிவகை செய்யப்பட்டது. நீர் வெளியேற்றம் 13. ஸ்பில் வே (Spill way) என்று அழைக்கப்பட்ட, அணையின் நடுவே அமைந்திருந்த, நீர் வழிந்தோடும் சுவற்றின் இடைவெளி வழியே, வெள்ளம் போகும் போது, அதன் வேகம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. தண்ணீர் தரையைத் தொட்டு அதன் நீர்த்துளிகளும், புகையும் அந்த பகுதியையே மறைத்தது. இந்த வழிந்தோடும் நீர் பகுதியை புகைப்படம் எடுக்க பெரும் சிரமம் ஏற்பட்டது என பதிவிடுகிறார் சூப்பரின்டெண்டன்ட் "பார்பர்". ஆனாலும், மிக அழகான ஒரு புகைப்படம் காணக் கிடைக்கிறது. அந்த நீர் புகை மண்டலம் 100 அடி உயரத்திற்கு எழும்பியது. 630 அடி அகலத்தில் அணையின் உயரமான பகுதியில் இருந்து காவிரி வெள்ளம் 100 அடி கீழே கொட்டும் இந்த காட்சி அந்த சமயத்தில் கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்க வேண்டும்! இந்த நிகழ்வு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்களை ஈர்த்தது! அதைக் காண பெருந்திரளாக பொது மக்கள் வந்தனர். நாட்டின் இந்த பகுதியில் இதுவரை காணக் கிடைக்காத காட்சி இது என்பதால் வெகு தூரத்தில் இருந்தும் இதைக் காண குவிந்தனர். அந்த இடங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் இந்த அளவு நீரின் விசையால் அணையின் பின்புறம் சேதமடையலாம் என்ற பயத்தில் அந்த கண்கொள்ளா காட்சியை ரசிப்பதற்கு மறந்தனர். சற்று கலவரத்துடனும், பயத்துடனும் வேலை செய்தனர். அந்த வழிந்தோடும் வெள்ளம் பல மாதங்களுக்கு நீடித்தது. நீர் வடியும் வரை அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை, காத்திருப்பதை தவிர! இவ்வளவு நடந்த பிறகு எந்தவொரு சேதாரமும் இல்லாத நிலையில் அணையின் உறுதித் தன்மை நிரூபிக்கப்பட்டதால் அனைவரின் நம்பிக்கையும் மேலும் பிரகாசமடைந்தது. தியாகம் செய்த உயிர்கள்மேட்டூர் அணை 1933, டிசம்பர் மாதம் ஓரளவுக்கு கட்டிட வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு சிறிய அளவிலான சின்னஞ்சிறு வேலைகள் மட்டுமே மீதமிருந்தன. ஏப்ரல் 1934 -ல் அவைகளும் முடிக்கப்பட்டு சில சாலைகள், நிரந்தர டிராம்வே ரயில் பாதைகள், மற்றும் தடுப்பு சுவர் வேலைகள் மட்டுமே எஞ்சி இருந்தன. கான்கிரீட் போட பயன்படுத்திய இரண்டு கோபுரங்களையும் அப்புறப்படுத்தி அணையின் பக்கவாட்டு ஓரங்களில் வைக்கப்பட்டது. இரண்டு கிரேன்கள் பயன்படுத்தி மீதமிருந்த வேலைகள் முடிக்கப்பட்டன. இரும்பு ஏணிகள் அணையின் உயரத்துக்குச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இதன் வழியாக பெண் தொழிலாளர்கள் சுலபமாக ஏறி மேலே சென்று அணையின் மேல்புறத்தில் மீதமிருந்த வேலைகளை செய்து முடித்தனர் என்பது பெருமை கொள்ளத் தக்க ஒரு பகிர்வாகும். மேட்டூர் அணை கட்டுமானத்தில் பெண்களின் பங்கு மிகவும் அளப்பரியது! இந்த வேலைகள் நடக்கும் போது ஓரிரு நபர்கள் அணைச்சுவற்றின் வட பகுதியில், தேங்கி நின்ற அணையில் நீரில் தவறி விழுந்த நிகழ்வுகள் நடந்தன. ஆனால், இதனால் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படா வண்ணம் அவர்கள் மற்றவர்களால் உடனடியாக மீட்கப்பட்டனர் என்ற தகவல் சில குறிப்புகளில் இருக்கிறது. கட்டுமானத்தின் போது ஏற்பட்ட வெள்ளம் அணையின் சுவற்றின் மீது வழிந்தோடிய காட்சி அதேசமயம், வேறு சில அரசு ஆவணக் குறிப்புகளில் 126 நபர்கள் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீர் வழிந்தோடிய அணையின் பின்பக்கத்தில் (தெற்குப் பகுதி) ஒருவர் கூட தவறி விழவில்லை என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. Spill way எனப்பட்ட நீர் வழிந்தோடிய இடத்திற்கு டிராம்வே மூலமாக மற்றும் கிரேன்களின் உதவியோடும் தேவையான பொருட்களை அணையின் மேல்புறத்துக்கு எடுத்துச் சென்று அணையின் சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. அணையின் இரு பக்கவாட்டுப் பகுதிகள் இதற்காக முழுமையாக இயங்கின. வேலைகள் சரியான அளவில் பிரித்து வழங்கப்பட்டது. 1934-ல் வெள்ளம் வருவதற்கு முன்பாக ஸ்பில்வே பகுதி முழுமையாக கட்டி மூடப்பட்டது. அதுவரை அணையின் நீர்மட்டம் +774 MSL என்ற அளவிற்கு மிகாமல் இருந்தது பாதுகாப்பாகவும் அமைந்தது. பல தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி, சில தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து கட்டி எழுப்பப்பட்ட உயிர் நாடி இந்த மேட்டூர் அணை என்பதை எவர் ஒருவரும் மறந்துவிடலாகாது. காவிரி நீரில் இவ்வாறு தியாகம் செய்த உயிர்களின் ஜீவனும் அடங்கியுள்ளதால், தமிழக மக்கள் இந்த மக்களுக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டவர்கள்! வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்ள சில புள்ளி விவரங்கள் உதவும். தமிழ்நாட்டில் காவிரி நீர் பாசன அளவு: 1. காவிரி டெல்டா பாசன அமைப்பு – தொன்மையானது – 12.47 லட்சம் ஏக்கர் 2. காவிரி மேட்டூர் திட்டம் - 1934ல் ஏற்படுத்தியதன் மூலம் - 3.23 லட்சம் ஏக்கர் 3. மேட்டூர் கால்வாய் திட்டம் - 1957-ல் விரிவு படுத்தியதன் மூலம் – 0.45 லட்சம் ஏக்கர். ஆக மொத்தம் 16.15 லட்சம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுவதோடு, தமிழ்நாட்டில் மொத்தமாக 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்கிறது ஓர் தரவு. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நீர்த்தேவையில் சுமார் 35 விழுக்காடை காவிரி நீர் பூர்த்தி செய்கிறது. கால்வாய் பாசன வசதிகளில் 75 விழுக்காடு, காவிரி படுகையின் 8 மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ளது. காவிரி நீரை நம்பி சுமார் 50 லட்சம் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஆதாரமாக அமைத்துக் கொண்டுள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தமிழகத்தின் சுமார் 20 மாவட்டங்கள் பயன்பெறுகிறது. சென்னை மாநகரம் உட்பட காவிரி நீர் பயன்படுத்தப்படுகிறது. ஒட்டு மொத்தமாக, தமிழக மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காடு மக்கள் காவிரி நீரை நம்பி தங்கள் வாழ்க்கையை கட்டமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காவிரி நீரின் ஆதார ஸ்ருதி தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேட்டூர் அணையாகும். 1934-ம் ஆண்டு தொடங்கி கடந்த 93 வருடங்களில் மேட்டூர் அணையிலிருந்து குறித்த நாளில் அதாவது ஜூன்-12-ம் தேதி இது வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட ஆண்டுகள் 20. இதுவரை ஜூன்-12-க்கு முன்பாகவே 11 ஆண்டுகள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேசமயம் ஜூன்-12க்கு பிறகு தாமதமாக 62 ஆண்டுகள் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தாமதம் எனினும் சேமித்து வைக்கப்பட்ட அணையிலிருந்து ஆண்டாண்டு காலமாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவை பயிர்கள் வளர்வதற்கு உதவி புரிகிறது, மேட்டூர் அணை. மேலும் பயணிப்போம். காவிரி நன்னீர் சிறப்பு பொருள்: காவிரியாறு, கடல் கரையைக் குத்தி கரைத்து மெலியச் செய்யும்.“மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலைநாள் மாமலர் தன்துறை தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று.” / அகநானூறு முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/science/history/anai-osai-mettur-dam-construction-series-28




