சேலம், அம்பேத்கர் சிலை சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சியில் உள்ள நான்கு ரோடு ரவுண்டானா பகுதியில் 2020-ம் ஆண்டு அம்பேத்கர் சிலை ஒரு தரப்பினரால் அமைக்கப்பட்டது. நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதுபோல் அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை 2021-ம் ஆண்டுதிறக்க முற்பட்டபோது, மற்றொரு தரப்பினர் இந்த பகுதியில் சிலையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது பணியில் இருந்த தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த சிலை மூடப்பட்டு எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்த பின்பு சிலையை திறக்க வேண்டும் என்றும் கூறினார்கள். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக சிலை திறக்காமல் துணியால் கட்டப்பட்டிருந்தது. கோர்ட்டு அனுமதி இந்த நிலையில் நேற்று திடீரென்று சிலை திறக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்து அந்த பகுதியில் உள்ள ஒரு தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக சிலையை மூட வேண்டும் என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னொரு தரப்பினர் சிலை திறக்கப்பட்டு விட்டதால் இனிமேல் மூட மாட்டோம் என்று கூறியதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கெங்கவல்லி போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அம்பேத்கர் சிலை அருகே உள்ள காமராஜர் மற்றும் ராஜீவ் காந்தி சிலை என 3 சிலைகளையும் தற்போது தற்காலிகமாக வருவாய்த்துறை உதவியுடன் தகரம் அடித்து மூட முடிவு செய்து உள்ளோம். எதுவாக இருந்தாலும் கோர்ட்டு அனுமதி பெற்ற பின்பு அம்பேத்கர் சிலையை திறக்க வேண்டும் என்றும், மேலும் தற்போது 2 சிலைகள் தற்காலிகமாக மூடப்படுகிறது என்றும் உதவி கலெக்டர் தமிழ் மணி முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கூறினார். போலீசார் குவிப்பு இதனிடையே நேற்று இரவு 9 மணி அளவில் ஆத்தூர் உதவி கலெக்டர் தமிழ்மணி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 3 சிலைகளையும் தகரம் அடித்து மூடும் பணியை தொடங்கினர். அப்போது போலீசாருக்கும், அம்பேத்கர் சிலையை திறக்க வலியுறுத்தும் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம் பொது மக்கள் கலைந்து செல்வதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெண் போலீஸ் உள்பட 3 போலீசாருக்கும், ஒரு தரப்பை சேர்ந்த 3 பெண்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையொட்டி ஒதியத்தூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/protest-against-opening-of-ambedkar-statue-sitting-cross-legged-uproar-in-salem




