சென்னை, உலக வெறிநாய்க்கடிநோய் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,623 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ரேபிஸ் என்ற கொடிய நோய்க்கான தடுப்பு மருந்தினை கண்டுப்பிடித்த விஞ்ஞானியான லூயிஸ் பாஸ்டர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அவர் மறைந்த தினமான செப்டம்பர் 28 ஆம் தேதி உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக கடைப்பிடிக்கபடுகிறது. வெறிநாய்க்கடி நோய் அதிகம் தாக்கக்கூடிய நாய்கள் மற்றும் பூனைகளை பெரும்பாலானவர்கள் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். வெறிநாய்க்கடி நோய் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலும், பிற விலங்குகளைக் கடிப்பதாலும் இந்நோய் பரவுகின்றது. எனினும் இந்தியாவில் வெறிநாய்க்கடி நோயினை அதிகம் பரப்புவது நாய்களே. நம் உடலில் சிறு கீறல் இருந்து அதில் பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும் வெறிநாய்க்கடி நோய்த் தாக்கம் ஏற்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில், கால்நடை மருத்துவத்துறையின் சார்பாக வெறிநாய்க்கடி நோய்த் தாக்கம் விலங்களுக்கும், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கும் பரவுவதைத் தடுக்க கீழ்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாய் பிடிக்கும் வாகனங்கள் தெருநாய்கள் மூலமாக வெறிநாய்க்கடிநோய் பரவுவதைத் தடுக்க மொத்தம் 40 நாய் பிடிக்கும் வாகனங்கள் மற்றும் 164 நாய் பிடிக்கும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் 200 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக நோயுற்ற நாய்களை மீட்கும் 15 வாகனங்களும் மற்றும் 3 வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளது. வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செல்லப்பிராணிகள் மூலமாக வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்க புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, திரு.வி.க நகர், நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் இயங்கும் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்கள் மூலமாக செல்லப்பிராணிகளுக்கு முற்றிலும் இலவசமாக வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டு 2026, (28.09.2026 வரை) 6,428 செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி பெருநகர சென்னை மாநகராட்சியின் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்கள் மூலமாக இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. கருத்தடை அறுவை சிகிச்சை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த 13 நாய் இனக்கட்டுபாட்டு மையங்கள் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், செட்டிமேடு I & II, திருவொற்றியூர், மாதவரம், கண்ணப்பர் திடல், நந்தம்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நடப்பு ஆண்டு 2026 - இல் (27.09.2026 வரை) 36,644 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும் அவற்றில் 32,629 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு இன்று (28.09.2026) திரு.வி.க நகர், கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமின் போது 2,471 தெருநாய்களுக்கும் 152 செல்லப்பிராணிகளுக்கும் என மொத்தம் 2,623 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாமின் மூலம் இன்று (28.09.2026) வரை பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 1,05,779 நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர். கமால் உசேன், கூடுதல் தலைமை கால்நடை மருத்துவ அலுவலர்கள் டாக்டர். மகேஸ்வரன், டாக்டர் பிரியா விண்ணரசி, மண்டல கால்நடை மருத்துவ அலுவலர்கள் டாக்டர். கார்த்தியாயினி, டாக்டர். அறிவுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/2623-dogs-vaccinated-against-rabies-in-chennai-in-a-single-day-chennai-corporation-information




