நெல்லை மாவட்டம், பாபநாசம் தாமிரபரணிக் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற உலகம்மை சமேத பாபநாசர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பரிகார ஸ்தலம் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். அவ்வாறு வருகை புரியும் பக்தர்கள், பரிகாரம் என்ற பெயரில் தாமிரபரணியாற்றில் புனித நீராடி ஆடைகளை களைந்து ஆற்றிலேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், தாமிரபரணி மாசுபடுவதுடன், துணிகள் குளிப்பவர்களின் கை, கால்களில் சிக்கி தடுமாறி பாறைகளில் வழுக்கி விபத்து ஏற்படுகிறது. பாபநாசம் இதனால் தாமிரபரணி ஆற்றில் ஆடைகளை விடுபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருக்கோயில் நிர்வாகத்தின் தீவிரக் கண்காணிப்பினால் பக்தர்கள் ஆற்றில் ஆடைகளை விட்டுச் செல்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. துணிகளை போடுவதற்கு என ஆங்காங்கே தனியாக இரும்புக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பரிகார பூஜைகளுக்குப் பிறகு துணிகளை விட்டுச் செல்வதற்குப் பதிலாக பசுக்கள், கன்றுகளை கோ தானமாக வழங்கலாம் என பரிகார மண்டபங்கள் நடத்தி வரும் சிலர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இதனை நம்பி பரிகாரம் செய்ய குடும்பத்துடன் வரும் பக்தர்கள், பசுக்கள், கன்றுகளை தானமாக வழங்க முன் வருகின்றனர். அப்போது பரிகாரம் செய்து வைப்பவர்கள், அவர்கள் செட் செய்து வைத்துள்ள நபர்களிடம் அந்த பசுக்கள் அல்லது கன்றுகளை வழங்குகின்றனர். அந்த நபர்கள், கேரளாவிற்கு அடிமாட்டிற்காக விற்பனை செய்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து பாபநாசத்தைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்களிடம் பேசினோம். “இந்த பரிகார பூஜைகளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பெரும்பாலும் ஏமாற வாய்ப்பில்லை. பாபநாசர் திருக்கோயில் எந்தெந்த பரிகாரங்களுக்கு என்னென்ன வகையான பூஜைகள் செய்ய வேண்டும், பரிகார பூஜை நடத்துபவருக்கு எவ்வளவு தட்சணை கொடுக்க வேண்டும் என எல்லா விஷயங்களுமே தெரியும். ஆனால், ஜோதிடர்கள், சாமியார்கள் கூறுவதைக் கேட்டு பரிகார பூஜைகளுக்காக இங்கு வரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களே பெருமளவில் ஏமாற்றப்படுகிறார்கள். பாபநாசம் கோயில் வாசலில் பேருந்துகளில் பயணிகள் இறக்கி விடப்படும் போதே அர்ச்சகர்கள் அவர்களை சூழ்ந்து கொள்கிறார்கள். வெளியூர்காரர்கள் என்பதை அவர்களின் பேச்சினை வைத்தே கணித்து விடுவார்கள். பரிகார பூஜைக்கு நீ, நான் என பக்தர்களை போட்டிப் போட்டுக் கொண்டு அழைத்துப் போவார்கள். பரிகாரத்திற்கு அழைத்து வரும் அர்ச்சகர்கள் முதல் பரிகாரபூஜை நடத்தும் அர்ச்சகர்கள் வரை தனி டீமே இயங்குகிறது. ஆற்றில் துணிகளை விட தடை உள்ளதால், ’பசு தானம்’ என்பதனை சில அர்ச்சகர்களே பக்தர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி பசு தானம் செய்ய வைக்கிறார்கள். பசு அல்லது கன்றுக்கு பூஜை செய்து மூன்று முறை குடும்பத்துடன் கோயிலை சுற்றிவரச் செய்து அதுவும் அர்ச்சகர்கள் கை காட்டும் நபரிடம் பசு அல்லது கன்று ஒப்படைக்கப்படுகிறது. ஒரே நபரிடம் ஒப்படைத்தால் சந்தேகம் வரும் என்பதால் அவர்கள் டீமைச் சேர்ந்த வேறு வேறு நபர்களுக்கு பசுக்கள் தானமாக வழங்கப்படுகின்றன. `இந்த பசு முறையாகப் பராமரிக்கப்படும், இதன் பால் திருக்கோயிலுக்கு சுவாமி – அம்பாளுக்கு அபிஷேகத்திற்காக வழங்கப்படும்' என்ற ஒற்றை வார்த்தையை நம்பி பக்தர்களும் ஏமாந்து விடுகிறார்கள். திருக்கோயில் பரிகார மண்டபம் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தானமாகப் பெறப்பட்ட பசுக்களை கேரளாவிற்கு அடிமாட்டிற்காக விற்பனைக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில் நிர்வாகம் தலையிட்டு தானமாக வழங்கப்படும் பசு அல்லது கன்றுகளை ரசீது அளித்து திருக்கோயிலில் ஒப்படைக்க வேண்டும் என அறிவிப்பு செய்ய வேண்டும். அவ்வாறு பெறப்படும் பசுக்களை திருக்கோயில் வளாகத்தில் கோசாலை அமைத்து பராமரித்து கோயில் தேவைக்குப் போக மீத பாலினை விற்பனை செய்வதன் மூலம் கோயிலுக்கு தனி வருமானம் கிடைக்கும். உள்ளூரைச் சேர்ந்த தகுதியான நபர்களுக்கு பசுக்களை வழங்கி அவர்களிடமிருந்து பாலுக்கான தொகையை பெறலாம். இல்லாவிட்டால் இந்த நிலை தொடரத்தான் செய்யும்” என்றனர். இது குறித்து திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் சிலரிடம் பேசினோம், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாபநாசம் திருக்கோயிலுக்காக பக்தர்கள் வழங்கும் பசுக்கள், திருக்கோயில் சார்பில் குறிப்பிட்ட சில நாள்களுக்கு ஒருமுறை ஏலம் விடப்பட்டுக் கொண்டிருந்தன. அதிலும், ஏலம் கேட்பவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகக் குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதால் மாட்டின் அசல் விலையில் பாதிகூட கோயில் நிர்வாகத்துக்குக் கிடைப்பதில்லை. பக்தர்கள் நீராடும் பாபநாசம் தாமிரபரணி நதிக்கரை இதனால், ஏலம் விடுவது கைவிடப்பட்டது. தற்போதைய சூழலில் பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை நிர்வாகமே பெற்று முறையாகப் பராமரித்து பாலினை கோயில் வளாகத்தில் கடை அமைத்து விற்பனை செய்யலாம். பரிகார பூஜைகளுக்குப் பால் தேவைப்படுவதால் பரிகார பூஜைக்கு வரும் பக்தர்கள் பணம் செலுத்தி தேவைப்படும் அளவு பாலினை பெற்றுக் கொள்வார்கள். அத்துடன் உள்ளுர் மக்களும் பால் வாங்கிச் செல்வார்கள். இந்த வகையில் திருக்கோயில் நிர்வாகத்திற்கு வருமானம் பெருகும்” என்றனர். இது குறித்து திருக்கோயில் செயல் அலுவலரான வெள்ளைச்சாமியிடம் பேசினோம், “நாங்கள் விசாரித்த வரையில் அப்படி எதுவும் தெரியவில்லை. இது குறித்து புகார் எதுவும் வரப்பெறவில்லை" எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/spiritual/temples/devotees-allege-that-cows-donated-at-the-papanasam-temple-are-being-sold-to-kerala-for-slaughter




