சென்னை, புதிய அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மை யான கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார். ஆணவத்தின் உச்சம் இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;- காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியைப் பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவகுமார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து, 16,745 கோடி ரூபாய் மதிப்பிலான மேகதாது அணைத் திட்டத்திற்கான அனுமதிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், மத்திய நீர் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, விரைவில் மத்திய அரசு அனுமதியளிக்கும் என்று உறுதிபட பேசி இருப்பது ஆணவத்தின் உச்சம்; இந்திய கூட்டாட்சிக்கு எதிரான கர்நாடக முதல்-மந்திரியின் வரம்பு மீறிய பேச்சுக்கு, இந்திய மத்திய அரசு எந்த மறுப்பும் தெரிவிக்காதது தமிழ்நாட்டிற்கு செய்கின்ற பெருந்துரோகம். மேகதாது திட்டத்தை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு காட்டும் இத்தகைய தொடர் முனைப்புகள் மிகுந்த கவலையளிக்கின்றன. தமிழ்நாடு பாலைவனமாகும் காவிரி கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தமான நதி இல்லை. அது தமிழ் மக்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்த வாழ்வாதார உரிமை! காவிரியின் கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் நீருரிமையையும், லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரத்தையும் புறந்தள்ளிவிட்டு கர்நாடகம் தன்னிச்சையாக புதிய அணையைக் கட்ட முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெறுவதற்கே ஆண்டுதோறும் போராட வேண்டியிருக்கும் நிலையில், மேலும் ஒரு மிகப்பெரிய அணையை காவிரியின் குறுக்கே கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும். மேகதாது அணைக்கு தொழில்நுட்ப அனுமதியோ, சுற்றுச்சூழல் அனுமதியோ உள்ளிட்ட எவ்வித ஒப்புதலையும் இந்திய மத்திய அரசு வழங்கக்கூடாது என்றும், மத்திய நீர் ஆணையம் கர்நாடகத்தின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் மாதம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானத்தை தகர்க்கும் வகையில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசு திட்டத்தை முன்னெடுக்க முயலும்போது, தவெக அரசு அடுத்தகட்டமாக எடுத்துள்ள நடவடிக்கை என்ன? உரிமையை இழந்த பிறகு போராடி என்ன பயன்? கர்நாடக முதல்-மந்திரி மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து அனுமதி கோருகிறார்; தமிழ்நாடு முதல்-அமைச்சர் காவிரி உரிமையைக் காக்க மத்திய அரசிடம் என்ன அரசியல் மற்றும் சட்ட அழுத்தத்தை உருவாக்கியுள்ளார்? மேகதாது திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசிடம் வெறும் கோரிக்கை வைத்து வழக்கம்போல் கடிதம் எழுதுவதோடு முதல்-அமைச்சர் விஜய் கடமையை முடித்துக்கொள்வாரா? கர்நாடக அரசு தனது மாநிலத்தின் நலனுக்காகத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்போது, தமிழ்நாட்டின் நலனுக்காக அதே உறுதியையும் வேகத்தையும் தவெக அரசு காட்ட வேண்டாமா? காவிரி நீர் உரிமையை இழந்த பிறகு போராடி என்ன பயன்? அணைக்கு அனுமதி கிடைப்பதற்கு முன்பே அதைத் தடுத்து நிறுத்துவதுதானே ஒரு பொறுப்புள்ள தமிழ்நாடு அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும்? அனுமதியை பெற விடக்கூடாது மேகதாது என்பது வெறும் ஓர் அணை சிக்கல் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் நீருரிமை, உணவு உற்பத்தி, டெல்டா உழவர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருங்காலத் தலைமுறைகளின் நீர்ப்பாதுகாப்போடு தொடர்புடைய மிக முக்கியமான உரிமைப் பிரச்சினையாகும். எக்காரணம் கொண்டும், எத்தகைய அழுத்தம் வந்தாலும், தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதிக்கும் மேகதாது அணையை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இந்திய மத்திய அரசின் அனுமதியை பெறவும் விடக்கூடாது. எனவே, கர்நாடக அரசின் மேகதாது அணை முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மேலும் உறுதியாக்கி, மத்திய அரசு எந்தவிதமான அனுமதியையும் வழங்காமல் தடுப்பதற்குத் தேவையான சட்ட, நிர்வாக மற்றும் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-tvk-government-must-not-grant-even-the-slightest-permission-for-the-attempt-to-build-the-mekedatu-dam-seeman




