சென்னை, அதிகரித்து வரும் மீன் விலை தமிழ் மாதமான ஆடி மாதம் பிறந்து 3 நாட்கள் ஆகிறது. அம்மன் மற்றும் முருகனுக்கு இது உகந்த மாதம் என்பதால், அசைவப் பிரியர்களில் பெரும்பாலானோர் ஆடி மாதத்தில் இறைச்சி சாப்பிடுவதில்லை. இதனால், ஆடி மாதத்தில் மீன் விலை வழக்கமாக குறையும். ஆனால், இந்த ஆண்டு குறைவதற்கு பதில் அதிகரித்து வருவது அசைவப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிமேட்டில் அலைமோதிய கூட்டம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 6 மாதங்களாக மீன் விலை குறையவே இல்லை. மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகாவது மீன் விலை குறையும் என்று எதிர்பார்த்தால், மீன் பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தடைக்காலம் முடிந்து ஒரு மாதம் முடிவடைந்துள்ள நிலையில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன் விலை குறைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான மீன் பிரியர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தனர். மீன்களுக்கு தட்டுப்பாடு கடலுக்கு சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரைக்கு திரும்பின. ஆனாலும், மீன்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் மீன் விலை குறையவில்லை. கடுமையாக உயர்ந்திருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அசைவப் பிரியர்கள் வேறு வழியில்லாமல் சிறிய வகை மீன்களையே வாங்கிச் சென்றனர். என்ன காரணம். இதுகுறித்து மீன் வாங்க வந்த சிலர் கூறியதாவது:- கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மீன் வரத்து குறைவாகவே உள்ளது. ஆனாலும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மீன்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதனால், உள்ளூர் மக்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் விலை அதிகமாக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், மீன்பிடி துறைமுகத்திலேயே மீன்கள் கிடைக்காமல் போகும். எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். விலை பட்டியல் இந்த நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று வஞ்சிரம் (ஒரு கிலோ) ரூ.1,300-க்கும், ஐ வவ்வால் ரூ.1,900-க்கும், வெள்ளை வவ்வால் ரூ.1,400-க்கும், கறுப்பு வவ்வால் ரூ.1,100-க்கும், பாறை ரூ.700-க்கும், கடல் விரால் ரூ.600-க்கும், சீலா ரூ.600-க்கும், சங்கரா ரூ.400-க்கும், கடம்பா ரூ.400-க்கும், நெத்திலி ரூ.250-க்கும், கானாங்கத்தை ரூ.300-க்கும் விற்பனை ஆனது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.dailythanthi.com/news/tamilnadu/fish-prices-remain-high-despite-the-onset-of-the-aadi-month-what-is-the-reason




