கேரள மாநிலத்தில் போதைப்பொருட்களை தடுக்கும் நோக்கில் `ஆபரேஷன் தூஃபான்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆபரேஷன் தூஃபான் சோதனையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிஸ்வான் என்பவரை எம்.டி.எம்.ஏ போதைப்பொருளுடன் வடகரை காவல்துறை கைது செய்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்கில் பெண் ஆசிரியைகள் இருப்பது தெரியவந்தது. ரிஸ்வான் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரத்தின் பணம் இந்த ஆசிரியர்களின் வங்கிச் கணக்குகளுக்கு சென்று சேர்ந்துள்ளன. இதையடுத்து சர்வசிக்ஷா அப்யான் திட்டத்தில் ஸ்பெஷல் எஜுகேட்டராக பணியாற்றி வந்த கூராச்சுண்டு செறுகாடு பகுதியைச் சேர்ந்த கே.காவ்யா மற்றும் அவரது தோழியான மருதோங்கரையைச் சேர்ந்த ஆசிரியை கே.சி.கீர்த்தனா ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். கடந்த 11-ம் தேதி கீர்த்தனாவும், அதைத் தொடர்ந்து காவ்யாவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரின் வங்கிச் கணக்குகளையும் காவல்துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இவர்களுடன் தொடர்புடையவர்களின் வங்கி விவரங்கள் மற்றும் மொபைல் எண்களும் பரிசோதிக்கப்பட்டுவருகின்றன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. எம்.டி.எம்.ஏ கோழிக்கோடு மாவட்ட சர்வ சிக்ஷா அபியான் அமைப்பின் கீழ் இயங்கும் பிளாக் ரிசோர்ஸ் சென்டர் கட்டுப்பாட்டில் உள்ள செறூவாளூர் அரசு எல்.பி. பள்ளிக்கு அருகில் உள்ள ஆட்டிசம் பள்ளியில் காவ்யா ஆசிரியராக இருந்தார். கீர்த்தனா வேறொரு பள்ளியில் பணியாற்றி வந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இவர்களுக்குப் பணி இருந்தது. ஆசிரியர் வேலையை பயன்படுத்தியே இவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் வியாபாரத்திற்காக கீர்த்தனா கியூ.ஆர் கோட் மூலமே பணத்தைப் பெற்று வந்துள்ளார். ஒரு பரிவர்த்தனைக்கு 2,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பணம் கிடைத்தவுடனே, போதைப்பொருள் இருக்கும் இடத்தின் லொகேஷன் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பப்படும். அந்த இடத்திற்குச் செல்பவர்களுக்கு வேறொரு நபர் போதைப்பொருளைக் கொடுப்பார். கைதுசெய்யப்பட்ட ஆசிரியைகள் வங்கிக் கணக்கில் அதிகதொகை சேர்ந்தவுடன், கீர்த்தனா அந்தப் பணத்தைக் காவ்யாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடுவார். காவ்யாவின் கணக்கிற்கு நேரடிப் பணப் பரிமாற்றங்களும் நடந்துள்ளதாகக் காவல்துறை கண்டறிந்துள்ளது. காவ்யா சமீபத்தில் விலை உயர்ந்த ஆடம்பரக் கார் ஒன்றை வாங்கியிருந்தார். இது குறித்துப் பள்ளியில் சக ஆசிரியர்கள் கேட்டபோது, வெளிநாட்டில் வேலை செய்யும் தனது சகோதரரின் கார் என்று பதிலளித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் காவ்யா பலத்த காயமடைந்தபோது, கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து பணம் திரட்டியே அவரது மருத்துவச் சிகிச்சைக்கான செலவை கவனித்துக்கொண்டனர். ஆனால், இப்போது அவரிடம் அதிக அளவு பணம் புழங்குவதற்கு போதைப்பொருள் விற்பனையே காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போதைப்பொருள் விற்பனையில் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dit is een Tamilse samenvatting om snel te lezen. Voor het volledige verhaal, extra context en updates ga je naar de oorspronkelijke uitgever.
Volledig artikel lezen
https://www.vikatan.com/crime/two-teachers-arrested-in-drug-dealing-case-in-kerala




