சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- உறவினர்கள் போராட்டம் சென்னையை அடுத்த சேலையூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்ததாகக் கூறி அண்மையில் மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, சிறையில் இருந்த பாலாஜி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜியின் உறவினர்கள், சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்று மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம், சிறை நிர்வாகம் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. கேள்விகள் முன்வைப்பு இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறது. கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே, நீதிமன்றக் காவலில் இருந்த ஒருவர் எவ்வாறு உயிரிழந்தார்? பாலாஜியின் உடலில் காயங்கள் இருந்தனவா? இருந்தால் அவை எவ்வாறு ஏற்பட்டன? அவர் இருந்த சிறைப்பிரிவின் சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனவா? அவை நீதிமன்றத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுமா? கைது செய்த காவல்துறை, சிறை நிர்வாகம் மற்றும் மருத்துவப் பதிவுகள் அனைத்தும் வெளிப்படையாக ஆய்வு செய்யப்படுமா? இந்த மரணம் குறித்து நீதித்துறை கண்காணிப்பில் சுயாதீன விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடுமா? ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும் வரை, அவர் ஒரு விசாரணைக் கைதிதான். அந்த நபரின் உயிருக்கு முழுப் பொறுப்பு, அரசுக்கும் சிறை நிர்வாகத்திற்குமே உள்ளது. உரிய நடவடிக்கை வேண்டும் எனவே, உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது சுயாதீன அமைப்பின் கண்காணிப்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். பிரேதப் பரிசோதனை அறிக்கை, சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டத்தின் முன் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தமிழ்நாடு அரசு, இது போன்ற சிறைக்காவல் மரணங்கள் அல்லது அரசின் அலட்சியத்தால் ஏற்படும் மரணங்களுக்கு, 50 லட்சம் அல்லது ஒரு கோடி ரூபாய் வரையிலான தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/are-police-stations-and-prisons-turning-into-places-that-claim-lives-velmurugan




