கான்பெர்ரா, ஆஸ்திரேலியா நாட்டின் கடற்கரை ஒன்றில், கடந்த சில தினங்களாக மர்மமான வெள்ளி நிற உலோக பந்துகள் கரை ஒதுங்கி வருகின்றன. இவை ஆபத்தானவையாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்த நிலையில், தற்போது அந்த மர்மமான பொருள் என்ன என்பது கண்டறியப்பட்டுள்ளது. மர்மப் பொருட்கள் ஆஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பாரஸ்ட் கடற்கரையில்(Forrest Beach), பந்து வடிவத்திலான உலோகப் பொருட்கள் கரை ஒதுங்கியது கண்டறியப்பட்டது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அந்த மர்ம பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். எச்சரிக்கை தொடர்ந்து இதே போல் அடுத்தடுத்து உலோக பந்துகள் அந்த கடற்கரையில் கரை ஒதுங்கியபடி இருந்ததால், அந்த பகுதியை சுற்றி சுமார் 50 மீட்டர் தூரத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக தீயணைப்புத்துறையினர் அறிவித்தனர். மேலும், கடற்கரையில் கரை ஒதுங்கும் எந்த விதமான பொருட்களையும் தொட வேண்டாம் என்றும், அது குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எங்கிருந்து வந்தன? இதற்கிடையில், கடற்கரையில் கரை ஒதுங்கிய பொருட்கள் உண்மையில் எங்கிருந்து வந்தன? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த பொருட்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அதாவது, இவை விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளில் இருந்து பிரிந்த பாகங்களாகவோ, அல்லது செயலிழந்த செயற்கைக்கோள்களின் பாகங்களாகவோ இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. விண்வெளிச் சிதைவுகள் இந்நிலையில், இது குறித்து ஆஸ்திரேலிய விண்வெளி முகமை (Australian Space Agency) ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், கடற்கரையில் கரை ஒதுங்கிய உலோகப் பந்துகளை விண்வெளி சிதைவுகள் (space debris) என்று ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இவை ஆபத்தில்லாத பொருட்கள்தான் என்றும், விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் இருந்து பிரிந்து வந்த பாகங்களாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இவை ஏதேனும் ஒரு ராக்கெட்டின் அழுத்தக் கலன்களாக (pressure vessels) இருக்கலாம் என்றும், பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து சமீபத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்த வெளிநாட்டு ராக்கெட்டின் பாகங்களோடு இந்த உலோக பந்துகள் ஒத்துப்போவதாகவும் ஆஸ்திரேலிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது. இது எந்த ராக்கெட்டில் இருந்து விழுந்திருக்கக் கூடும் என்பதை கண்டறிய சர்வதேச நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆபத்தானது என்றே கருத வேண்டும் இப்பொருட்கள் பாதுகாப்பானவை என்று கருதப்பட்டாலும், மேலும் பல சிதைவுகள் கரை ஒதுங்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய விண்வெளி முகமை கூறியுள்ளது. அப்படி ஏதேனும் பொருட்கள் கரை ஒதுங்கினால், அவற்றை தொடவோ, நகர்த்தவோ அல்லது எடுத்துச் செல்லவோ கூடாது என்றும், ஆபத்து இல்லை என்று நிரூபிக்கப்படும் வரை அது ஆபத்தானது என்றே கருத வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/mysterious-metal-spheres-wash-ashore-in-australia-did-they-come-from-space-warning-issued-to-the-public




