``விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…" கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் சுமார் 400 மாணவிகளுடன் இயங்கி வரும் அந்த அரசுப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்தார் கவிதா (மாணவியின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கடந்த 07.09.2026 தேதியன்று காலையில் வீட்டில் படுத்துக் கொண்டிருந்த மாணவியிடம், ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டிருக்கின்றனர் அவரது பெற்றோர். அதற்கு, `நான் விஷம் குடிச்சிட்டேன்… செத்துடுவேன்னு பயமா இருக்கும்மா…' என்று கவிதா கூறியதில் பதறிப் போன பெற்றோர், அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிதா, கடந்த 11.09.2026 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஜெகதீசன் அதையடுத்து உயிரிழப்பதற்கு முன்பு மாணவி கவிதா கொடுத்த மரண வாக்குமூலம் மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஜெகதீசன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் கச்சிரப்பாளையம் போலீஸார். சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஆசிரியர் ஜெகதீசன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் விஷம் குடித்தேன் என்று மாணவி கவிதா மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம்" என்றனர். ``ஹெட்மாஸ்டர் நடவடிக்கை எடுக்காததுதான் காரணம்" மாணவி கவிதாவின் உறவினர்களிடம் பேசினோம். ``எங்கப் பொண்ணைப் போல அமைதியானவளைப் பார்க்க முடியாது. யாரையும் கஷ்டப்படுத்தற மாதிரி ஒரு வார்த்தைகூட பேச மாட்டா. அவளைத் தனியா கூப்பிட்டு ரொம்ப அசிங்கமா நடந்திருக்கான் அந்த ஜெகதீசன். அதையடுத்து கவிதாவின் அப்பாவும், அம்மாவும் பள்ளிக்கூடம் போய், ஹெட்மாஸ்டர் காமராஜ்கிட்ட ஜெகதீசன் மேல புகார் கொடுத்தாங்க. அதுக்கு அவர், சரி விசாரிக்கறேன்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஆனால் ஜெகதீசன் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதோட மறுபடியும் கவிதாகிட்ட அதேபோல அசிங்கத்தைப் பண்ணியிருக்கான் ஜெகதீசன். அதில் பயந்துபோன எங்கப் பொண்ணு, `எனக்கு ஸ்கூல் போகப் பிடிக்கல. போனா மறுபடியும் அதேபோல பண்ணுவாரு. அடிப்பாரு'ன்னு சொன்னா. ஆனால் எங்களைப் போல ஏழைங்களுக்கு படிப்பு வேணும்னா கவர்ன்மெண்ட் பள்ளிக்கூடத்தை விட்டா வேற என்ன வழி இருக்குது? தனியார் பள்ளிக்கூடத்துல படிக்க வைக்கறதைப் பற்றி எங்களால நினைக்கக்கூட முடியாதே? தலைமை ஆசிரியர் காமராஜ் அதனால் புள்ளையோட படிப்பு கெட்டுடக்கூடாதுனு மறுபடியும் அவளோட அப்பாவும், அம்மாவும் ஸ்கூல் போய் ஹெட்மாஸ்டர் காமராஜ்கிட்ட புகார் கொடுத்தாங்க. அப்பவும், `பாத்துக்கலாம் விடுங்க'னு சாதாரணமா சொல்லி அனுப்பியிருக்காரு காமராஜ். அதுக்கப்புறம்தான் எங்கப் புள்ளை இந்த முடிவை எடுத்துட்டா. முதல் நாளே ஹெட்மாஸ்டர் அந்த ஜெகதீசன் மேல நடவடிக்கை எடுத்திருந்தா, இன்னைக்கு எங்கப் புள்ளை உசிரோட இருந்திருப்பா. அதனால் ஹெட்மாஸ்டர் காமராஜ் மேலேயும் நடவடிக்கை எடுத்து கைது பண்ணணும். ஹாஸ்பிடல்ல எங்க புள்ளை சாகக் கிடந்தப்போ அந்த ஜெகதீசனும், ஹெட்மாஸ்டர் காமராஜும் வந்து, `எந்தப் புகாரும் வேணாம். பேசி சரி பண்ணிக்கலாம்'னு சொன்னாங்க. கலங்கடிக்கும் மாணவியின் மரண வாக்குமூலம் அதேபோல அதுக்கப்புறம், அந்த ஜெகதீசன் எங்களுக்குப் போன் பண்ணி, `கேஸ்லாம் எதுவும் குடுக்காதீங்க. எவ்வளவு பணம் வேணும்னாலும் கொடுக்கறேன்னு பேசினான். அந்தத் தைரியம் எப்படி வந்துச்சு அவனுக்கு? எங்க பொண்ணுக்கு நடந்தது இனிமேல் எந்தப் பொண்ணுக்கும் நடக்கக் கூடாது. அதனால் அந்த ஹெட்மாஸ்டர் காமராஜையும் கைது பண்ணனும்" என்றனர் ஆவேசமாக. சடலமாக மாணவி இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக தலைமை ஆசிரியர் காமராஜை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து கள்ளக்குறிச்சி எஸ்.பி ஷானஸ் அவர்களிடம் பேசியபோது, ``ஆசிரியர் ஜெகதீசனைக் கைது செய்திருப்பதுடன், மற்ற சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல தலைமை ஆசிரியர் மீது மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரையும் விசாரித்து வருகிறோம்” என்றார். `இன்டர்னல் மார்க் போடமாட்டேன்; ஏன் பயப்படுற?' - மாணவி கர்ப்பத்தால் சிக்கிய புதுச்சேரி பள்ளி ஆசிரியர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/teachers-repeated-sexual-harassment-government-school-student-commits-suicide




