சென்னை, பள்ளி வளாகங்களைச் சுற்றிலும் தாராளமாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். மாணவர்கள் கொல்லப்படும் அவலம் இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளைய தலைமுறையினர் அடுத்தடுத்து வன்முறைக்குப் பலியாகி உயிரிழக்கும் தொடர் அவலங்கள் தமிழக மக்களைப் பெருங்கவலையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன. கல்வி பயில வேண்டிய இளங்குருத்துகள் கொடூரமாகக் கொல்லப்படும் அவலம் நீடிப்பது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நடப்பு 2026 ஜூன் முதல் செப்டம்பர் 18 வரை அரங்கேறியுள்ள மரணங்கள் அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா? சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பயின்ற 15 வயது மாணவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட கொடூரம். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே 4-ஆம் வகுப்பு பயின்ற 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை. தேனி மாவட்டத்தில் போடி அருகே பள்ளிக் குழந்தைகள் இருவர் கிணற்றில் தள்ளிக் கொலை. கோவை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர் குழுவால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழப்பு. சென்னையில் திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர வழக்கில் 12 பள்ளி மாணவர்கள் கைது. சேலம் மாவட்டத்தில் கே.ஆர்.தோப்பூரில் 10-ஆம் வகுப்பு மாணவர் மர்ம மரணம். இவை ஒவ்வொன்றும், மாணவர் சமுதாயத்தின் மனங்களில் வன்முறைக் கலாச்சாரம் எந்த அளவிற்குப் புரையோடிப்போயுள்ளது என்பதற்கான சாட்சியங்கள். போதைப்பொருள் புழக்கம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் பத்திரமாக வீடு திரும்புவார்களா? என்ற மரண பயத்தில் பெற்றோர் வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி வளாகங்களைச் சுற்றிலும் தாராளமாகக் கிடைக்கும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது யார்? குற்றங்கள் நிகழ்ந்த பிறகு ஆட்களைப் பிடித்து அடைப்பது மட்டுமே காவல்துறையின் சாதனையா? உளவுத்துறையும் காவல்துறையும் செயலிழந்து கிடக்கின்றனவா? வெற்று அறிக்கைகளோடு கடந்து செல்லாமல், போர்க்கால அடிப்படையில் தீர்வு காணத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? காவல்துறை ரோந்து கட்டாயமாக்கப்பட வேண்டும் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், கல்வி நிலையங்களின் சுற்றுவட்டாரத்தில் போதைப்பொருள் விற்பனையை வேரறுக்கத் தயவுதாட்சண்யமற்ற அதிரடி வேட்டை நடத்தப்பட வேண்டும். வெறும் கண்துடைப்பாக இல்லாமல், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர்கள், காவல்துறை அடங்கிய ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழுக்கள் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உடனடியாகக் களமிறக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி வளாகப் பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாணவரின் உயிரும் ஒரு குடும்பத்தின் எதிர்காலம். அரசின் நிர்வாக அலட்சியத்தால் எதிர்காலத் தலைமுறையினர் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/where-is-the-guarantee-for-the-students-lives-velmurugan-asks




