ஈரோடு, ஆடி மாதம் இன்று பிறக்கிறது. இதையொட்டி தேங்காய் சுடும் பண்டிகைக்காக ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது. ஆடி மாத பிறப்பு ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை வெகுசிறப்பாக கொண்டாடி வரவேற்பது வழக்கம். அன்று ஈரோட்டில் தேங்காய் சுடும் பண்டிகை பிரசித்தி பெற்றதாகும். அப்போது வீட்டு வாசலில் பெண்கள் தேங்காய்களை சுட்டு, அருகில் உள்ள கோவில்களுக்கு எடுத்துச்சென்று அதை விநாயகருக்கு படைத்து வழிபாடு நடத்துவது தனிச்சிறப்பு. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. இதையொட்டி பெண்கள் வீட்டை சுத்தம் செய்து வருகின்றனர். இன்று மாலையில் தேங்காய் சுடும் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அழிஞ்சி குச்சி வீட்டு வாசலில் அல்லது கோவில்களின் முன்பு நெருப்பு மூட்டி தேங்காய் சுடுவார்கள். பின்னர் தேங்காயை எடுத்து விநாயகர் முன்பு வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்தவுடன் தேங்காயை உடைத்து, உள்ளே ஏற்கனவே வைக்கப்பட்ட பச்சரிசி, பருப்பு, வெல்லம் கலந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக ஈரோடு சந்தை மற்றும் காய்கறி, மளிகை கடைகளில் அழிஞ்சி குச்சிகள் நேற்று காலையிலேயே குவிக்கப்பட்டன. அவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்சென்றதால் அழிஞ்சி குச்சிகள் விற்பனை மும்முரமாக இருந்தது. மருத்துவ குணங்கள் இதுகுறித்து மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, 'சித்த மருத்துவத்திலும். ஆன்மிகத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அழிஞ்சில் என்ற மரத்தில் இருந்து இந்த குச்சிகள் வெட்டப்படுகின்றன. அழிஞ்சில் மரத்தின் மருத்துவ குணங்கள் இந்த குச்சியின் மூலம் சுடப்படும் தேங்காயிலும் இறங்குவதால், ஆடி மாத சீதோஷ்ண மாற்றங்களால் ஏற்படும் நோய்களை தடுக்கும் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான அழிஞ்சி குச்சிகள் சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழிஞ்சி குச்சிகள் சங்ககிரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு ஒரு குச்சி ரூ.15 முதல் ரூ.17 வரையும், பொதுமக்களுக்கு ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/azhinjic-sticks-sold-for-coconut-roasting-festival-in-erode-on-the-occasion-of-aadis-birth




