சென்னை, தமிழ் இலக்கிய மாமேதை, பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவையொட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் இலக்கிய மாமேதை தமிழ் இலக்கிய மாமேதை - பட்டிமன்ற சுடரொளி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி துன்ப இடியாக என்னை தாக்கியது. 1960களில் அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார். மதுரை வளவன் என்ற பெயரில் இலக்கிய மேடைகளில், பட்டிமன்றங்களில் நேரிடையாக காண்போர், தொலைக்காட்சிகள் வழியாக பார்ப்போர் என இலட்சோப இலட்ச தமிழ் மக்களை தமிழ் இலக்கியத்தின் பால் மந்திரச் சொல்லாக கட்டிப் போட்டவர் சாலமன் பாப்பையா அவர்கள் ஆவார்கள். நகைச்சுவை பேச்சு 1962-ம் ஆண்டு எட்டயபுரம் பாரதி விழாவில் அவர் பேச்சை கேட்டு சொக்கிப்போனேன். பாரதி பாடலை கணீர் என்ற குரலில் அற்புதமாக பாடுவார். அதன்பின்னர் அந்தப் பேச்சும் நகைச்சுவையும், கேட்போரை ஈர்க்கும் இலக்கிய புலமையும் இணைந்தே அவரது உரை அமையும். அவர் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு திருக்குறளுக்கு அற்புதமாக விளக்கம் தருவார். உரையாசிரியர்களின் உரையை உள்வாங்கி இருப்பார். ஆனால் கேட்பவர்களுக்கு கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் எனும் திருகுறள் வரிகளுக்கு ஏற்ப அவரது பேச்சு அனைவரையும் வசீகரிக்கும். பட்டிமன்ற நடுவர் இலக்கிய புலமை பெற்றவர்களும் அதிலே ஈர்க்கப்படுவார்கள். சாதாரண பாமர மக்களும் உள்வாங்கி கேட்டுப் பயன்பெறுவார்கள். பட்டிமன்றத்தில் நடுவராக அவர் இருதரப்பினரின் கருத்துக்கும் இடை இடையே குறுக்கீடாக இரண்டு வாக்கியங்களைச் சொல்வார். கேட்டுக் கொண்டிருப்பவர்களும், தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பார்கள். கருத்தும் ஆழ்மனதில் பதியும். அவரோடு பல பட்டிமன்றங்களில் 60களில் பேசியிருக்கிறேன். என் கிராமத்திற்கு அழைத்துச் சென்று திருக்குறள் பட்டிமன்றத்திற்கு நடுவராக அவர் ஆற்றிய உரைகள் மறக்க முடியாதவை. 65 ஆண்டுகள் பணி பொதுவுடமை இயக்க சிந்தனை; சமதர்ம கண்ணோட்டம், அவரது எளிமை பழகும் நண்பர்களிடத்தில் அவர் காட்டுகின்ற பரிவு, மரியாதை அவருக்கு மென்மேலும் புகழைச் சேர்த்துக் கொடுத்தது. கடந்த இரண்டு நாட்களில்கூட அவர் நடத்தப்போகும் பட்டிமன்றத்தின் சில நிமிடங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோது, அவரது பாண்டித்தியத்தைக் கண்டு பெருமிதம் கொண்டேன். 65 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்திற்கும், செந்தமிழ் மொழிக்கும் அருட்கொடையாக பெரும் சிறப்பு செய்தவர் போற்றற்குரிய சாலமன் பாப்பையா அவர்கள் ஆவார்கள். அரசு மரியாதையுடன் நல்லடக்கம் அம்மாபெரும் இலக்கிய மாமலைக்கு தமிழக அரசு சிறப்பு செய்து, அரசு மரியாதையுடன் அவரது நல்லடக்கம் நடைபெற வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறேன். காலத்தால் அழியாத புகழுக்கும், பெருமைக்கும் உரியவரான இலக்கியப் பேரொளி சாலமன் பாப்பையா அவர்களின் மறைவால் தாங்க முடியாத துக்கத்திலும், துயரத்திலும் ஆழ்ந்திருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அப்பெருமகனாரை நெஞ்சில் போற்றும் தமிழன்பர்களுக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியை, ஆழ்ந்த இரங்கலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-literary-genius-and-luminary-of-the-party-solomon-papaiah-passes-away-vaiko-condoles




