சென்னை, மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும். அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேகதாது அணை இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: - காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது. கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் நேற்று நடைபெற்ற சுத்தூர் மடத்தின் மறைந்த ஆதீனம் ஸ்ரீ இராஜேந்திர சுவாமிகளின் 111ஆம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய டி.கே.சிவக்குமார் அவர்கள், "கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு கிருஷ்ணராஜசாகர் அணை எந்த அளவுக்கு உதவியதோ, அதேபோல் மேகதாது அணையும் உதவும். மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டு அண்மையில் அளித்த தீர்ப்பு கர்நாடகத்திற்கு சாதகமாக இருப்பதால், அதன்படி அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய அரசை கர்நாடக அரசு கோர உள்ளது" என்று தெரிவித்துள்ளார். தண்ணீர் கிடைக்காது கர்நாடக முதல்-மந்திரியின் கூற்றுப்படி இரு விஷயங்கள் அம்பலமாகியுள்ளன. முதலாவது மேகதாது கர்நாடக உழவர்களை மேலும் வலிமைப்படுத்த உதவும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடக அரசு, விவசாயத்திற்குப் பயன்படுத்த உள்ளது என்பது தெளிவாகிறது. மேகதாது அணையில் தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து குடிநீர் தேவைக்கு தவிர, பாசனத்திற்காக ஒரு வாளி நீரைக்கூட கர்நாடகம் எடுக்காது என்று இதுவரை கர்நாடக அரசு கூறி வந்த நிலைப்பாட்டுக்கு இது முற்றிலும் மாறாக உள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும்; அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி கூறிவந்த குற்றச்சாட்டை கர்நாடக அரசின் இந்தப் புதிய நிலைப்பாடு உறுதி செய்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து மேலும் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் மேகதாது அணையை கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, இப்போது அதன் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தப்போவதாக கூறியிருப்பது மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு எதிரானது. இந்த ஒற்றைக் காரணமே மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு போதுமானது. இதை மத்திய அரசின் கவனத்திற்கும், சுப்ரீம்கோர்ட்டின் கவனத்திற்கும் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும். மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்-மந்திரியின் உரை மூலம் தெரியவந்துள்ளது. மேகதாது அணையின் நீர்த்தேக்கப்பகுதி 5,000 ஹெக்டேர், அதாவது 12,500 ஏக்கராக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நீர்த்தேக்கப் பகுதி 5,400 ஹெக்டேர், அதாவது 13,500 ஏக்கராக இருக்கும் என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 67 டிஎம்சியை விட அதிக நீரை மேகதாது அணையில் தேக்கி வைக்க முடியும். அதுமட்டுமின்றி மேகதாது அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுமதிக்கக் கூடாது. சுப்ரீம்கோர்ட்டு அனுமதியா. கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவியேற்ற நாளில் இருந்தே மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கலாம் என்று தான் சுப்ரீம்கோர்ட்டு கூறியிருக்கிறதே தவிர, மேகதாது அணையைக் கட்ட அனுமதி அளிக்கவில்லை. ஆனால், மேகதாது அணையை கட்ட சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அவர்கள் தொடர்ந்து பொய்யான பரப்புரை செய்து வருகிறார். இதை மறுத்து, உண்மை நிலையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசோ, எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. நேபாளத்தில் இமயமலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேகதாது அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது. அலட்சியம் காட்டக்கூடாது மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேகதாது அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/karnataka-shows-urgency-for-mekedatu-dam-tamil-nadu-government-must-not-lose-its-cauvery-rights-anbumani-ramadoss




