மலைத்தலங்கள் அனைத்துமே மனதுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருவன. உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் தருவன. அப்படி ஒரு ஆலயம்தான் திண்டுக்கல் மாவட்டம் - பழநி பிரதான சாலையில், ரெட்டியார் சத்திரத்திலிருந்து கன்னிவாடி செல்லும் வழியில், 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோபிநாதன் மலை. நாயக்கர்கள் ஆட்சி செய்த காலம். காசி யாத்திரைக்குப் புறப்பட்டார் அந்தணர் ஒருவர், தனது பயணத்தின் இடையே ஆந்திர மாநிலம் பெல்லாரி பகுதியை அடைந்தார். அப்போது அந்தப் பகுதியை ‘வல்லாளன்’ என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய மனைவி கோப்பம்மாள்; மகன் கோபிநாதன். கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில் பெல்லாரியில் அப்போது கடும் வறட்சி. அத்தகைய சூழலிலும், தன்னை நாடி வந்த அந்தணரை வல்லாள மன்னன் மனமுவந்து உபசரித்தார். மன்னனின் விருந்தோம்பலில் மனம் நெகிழ்ந்த அந்தணர், ‘‘நீங்கள் பாண்டிய நாட்டுக்குச் செல்லுங்கள். அங்கு வளமும் வாழ்வாதாரமும் கிடைக்கும்’’ என்று அறிவுறுத்தினார். அந்தணரின் வார்த்தைகளை நம்பிய வல்லாளன், மனைவி கோப்பம்மாள், மகன் கோபிநாதன் மற்றும் பசு மந்தைகளுடன் பாண்டிய நாட்டை நோக்கிப் புறப்பட்டார். பல இடங்களைக் கடந்து வந்த அவர்கள், பாண்டிய தேசத்தின் நுழைவாயிலாகத் திகழ்ந்த ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ஒரு குன்றின் அடிவாரத்தை அடைந்தனர். அந்த இடம் பசுமையும் செழிப்புமாக, இயற்கை அழகு கொஞ்சும் பகுதியாக இருந்தது. எனவே, அங்கேயே தங்க முடிவு செய்தனர். பசுக்களைப் பராமரித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், சில ஆண்டுகளில் அந்தப் பகுதியையும் வறட்சி வாட்டியது. பசுக்களுக்குத் தேவையான உணவும் தண்ணீரும் கிடைக்காமல் அவை வாடின. தங்களிடம் இருந்த கால்நடைகளின் நிலையைப் பார்த்து மனம் வருந்திய கோபிநாதன், இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்தார். ‘‘மாங்கரை ஆற்றில் நீராதாரம் பெருகி, இந்தப் பகுதியின் வறுமை நீங்கினால், என் உயிரையே இறைவனுக்குக் காணிக்கையாக்குகிறேன்’’ என்று வேண்டிக்கொண்டார். அவருடைய பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்த்தாரோ என்னவோ. அன்றிரவே அந்தப் பகுதியில் நல்ல மழை பெய்தது. மாங்கரை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வறண்டு கிடந்த பூமி மீண்டும் செழிக்கத் தொடங்கியது. மக்கள் மகிழ்ந்தனர். கால்நடைகளும் பசியின்றி வளம்பெற்றன. தனது வேண்டுதல் நிறைவேறியதை எண்ணிய கோபிநாதன், தான் அளித்த வாக்கை நிறைவேற்ற முடிவு செய்தார். ஒரு வேப்ப மரத்தில் தனது எருதைக் கட்டிவிட்டு, அதன் கொம்பில் விழுந்து உயிரைத் துறந்தார். மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் கோப்பம்மாளும் உயிரை விட்டதாகச் சொல்லப்படுகிறது. கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில் காலம் கடந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கன்னிவாடி ஜமீன்தார் இந்தப் பகுதிக்கு மான் வேட்டைக்காக மாட்டு வண்டியில் வந்தார். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், அவரது வண்டியை இழுத்து வந்த மாடுகள் மேற்கொண்டு நகர முடியாமல் திடீரென தரையில் படுத்துவிட்டன. அப்போது ஜமீன்தாருக்கு அங்கே இருந்த கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் அனைத்தும் மான்களாகக் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. அவற்றை வேட்டையாட அவர் முயன்றார். ஆனால், ஒரு மான்கூட அவரிடம் சிக்கவில்லை. சோர்வுடனும் குழப்பத்துடனும் ஊர் திரும்பிய ஜமீன்தார், கோடாங்கியை அழைத்து குறி கேட்டார். அப்போது கோடாங்கி, அந்தப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோபிநாதன் மற்றும் கோப்பம்மாளின் தியாகம் உள்ளிட்ட நிகழ்வுகளை விரிவாக எடுத்துரைத்தார். அன்றைய தினம் அந்தி வேளையில், சித்தர் ஒருவர் ஜமீன்தாரின் முன் தோன்றினார். ‘‘நீ சென்று வந்த இடத்திலுள்ள மலையின் மீது கோபிநாதன் எழுந்தருளியிருக்கிறார். அவர் பசுக்களிடம் அளவற்ற அன்பு கொண்டவர். அவருக்கு மாடுகளைக் காணிக்கையாக அளிப்பதாக நேர்ந்துகொள். மலையின் மீது அவருக்கு சிலை அமைத்து, நித்ய பூஜைகளும் விழாக்களும் நடைபெற ஏற்பாடு செய். உன் மாடுகள் நலம்பெறும். நீயும் உன் தேசமும் இறையருளால் செழிக்கும்’’ என்று கூறிவிட்டு சித்தர் மறைந்தார். சித்தர் கூறியபடியே ஜமீன்தார் மலையின் மீது, வேப்பமரத்தடியில் குழலூதும் திருக்கோலத்தில் கோபிநாதருக்கும், தலையில் கஞ்சிக் கலயத்தைச் சுமந்த நிலையில் கோப்பம்மாளுக்கும் சிலைகள் அமைத்தார். மேலும், ஏராளமான பசுக்களையும் கோபிநாதருக்குக் காணிக்கையாக அளித்ததாகத் தல வரலாறு கூறுகிறது. கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில் இன்று, கடல்மட்டத்திலிருந்து சுமார் 450 அடி உயரத்தில் மலையின் மீது அருள்பாலிக்கிறார் கோபிநாத சுவாமி. பக்தர்களால் ‘தென்னகத்துக் கோகுலம்’ என்று போற்றப்படும் இந்தத் திருத்தலம், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான ஆலயமாகக் கருதப்படுகிறது. மலை அடிவாரத்தில் மாங்கரை ஆறு ஓடுகிறது. அங்கிருந்து சுமார் 619 படிகள் ஏறிச் சென்றால், மலையுச்சியில் அமைந்துள்ள கோயிலை அடையலாம். நுழைவாயிலில் கருடாழ்வாரும் ஆஞ்சநேயரும் எதிரெதிரே தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கண்ணபிரான் எனும் கோபிநாதர், குழலூதும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி தருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் புத்திரன்கோட்டை அகத்தீஸ்வரர் ஆலயம்: நெய் தீபம் இட்டால் பிள்ளை வரம் கிடைக்கும்! இத்தலத்தின் உற்சவ மூர்த்தியும் தனிச்சிறப்பு கொண்டவர். இரண்டு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகளை ஏந்தி, பக்தர்களுக்கு அவற்றை ஊட்டுவது போன்ற பாவனையில் காட்சி தருகிறார்! கோப்பம்மாளுக்கும் இக்கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. வேப்பமரம் தல விருட்சமாகத் திகழ்கிறது. பசுக்களின் மீது கோபிநாத சுவாமி கொண்டுள்ள அளவற்ற அன்பை நினைவுகூரும் வகையில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர். தங்கள் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, மண்ணால் செய்யப்பட்ட பசு உருவங்களை வைத்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், தங்கள் மாடுகளை கோயிலுக்கு நேர்ந்து விடும் வழக்கமும் உள்ளது. அவ்வாறு நேர்ந்து விடப்படும் மாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் தொழுவம் அமைத்து பராமரித்து வருகின்றனர். மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரங்களில், அவற்றை ஏலத்தில் விற்பனை செய்யும் நடைமுறையும் இங்கு உள்ளது. கோபிநாதன்மலை கோபிநாத சுவாமி கோயில் ஆவணி மாதம் இத்தலத்தில் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். உற்சவர் மலையடிவாரத்துக்கு எழுந்தருளி, சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் உலா செல்கிறார். உறியடி, வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெறும். விழா நிறைவடைந்ததும் மீண்டும் மலையேறி கோயிலை அடைகிறார். கிருஷ்ண ஜயந்தி நாளில் சுவாமிக்கு வெள்ளிக்கவசமும் அழகிய ஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. குழந்தை வரம் வேண்டுவோர், பணியிட மாற்றத்தை எதிர்பார்ப்போர் உள்ளிட்ட பக்தர்களும் கோபிநாத சுவாமியை நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், காளப்பனூர் முத்துமாரியம்மன்: பேசாத குழந்தைகளைப் பேசவைக்கும் தாய்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/spiritual/temples/dindigul-gopinathan-malai-arulmigu-gopinatha-swamy-temple



