சென்னை, தமிழகம் முழுவதும் நிலையான மற்றும் தடையற்ற மின்வினியோகத்தை உறுதி செய்யவும், மின் தடை பிரச்சினைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் 'மீண்டும், மீண்டும் ஏற்படும் தடங்கல்களை நீக்கும் திட்டம்' (ஆர்.டி.இ.பி.) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள், மின் பகிர்மான அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய திட்டம் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகம் சீராக இருந்தாலும், சில குறிப்பிட்ட துணை மின் நிலையங்கள், மின் பாதைகள் மற்றும் மின் உபகரணங்களில் மீண்டும், மீண்டும் மின்தடை ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினைகளை தற்காலிகமாக சரிசெய்வதை விட, அதன் மூலக்காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்காக 'ஆர்.டி.இ.பி.' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மின்தடை அடிக்கடி நிகழ்தல், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை, சேவை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அறிவியல் அடிப்படையில் ஆய்வு ஒவ்வொரு மின்தடைக்கும் 'மூலக்காரண பகுப்பாய்வு' எனப்படும் அறிவியல் அடிப்படையிலான காரண ஆய்வு மேற்கொள்ளப்படும். மின் மாற்றி கோளாறு, கேபிள் பழுது, பாதுகாப்பு அமைப்பு செயலிழப்பு, அதிக சுமை, விலங்குகள் அல்லது பறவைகள் காரணமாக கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. திட்டத்தை கண்காணிக்க தலைமையகத்தில் மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக்குழு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அணி இணைந்து மாநிலம் முழுவதும் ஏற்படும் மின் தடையை ஆய்வு செய்து, சிறந்த தொழில்நுட்ப நடைமுறைகளை பரிந்துரைக்கும். தடையற்ற மின்சாரம் புதிய துணை மின் நிலையங்கள், கூடுதல் மின் பாதைகள், திறன் மேம்பாடு, 'நெட்வொர்க்' தானியக்கம் உள்ளிட்ட நீண்டகால உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மீண்டும், மீண்டும் ஏற்படும் மின்சார தடைகள் குறைவதோடு, மின்சார வினியோக நம்பகத்தன்மை உயர்ந்து, நுகர்வோருக்கு தடையற்ற மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/தமிழகத்தில்-மின்தடையை-போக்க-புதிய-திட்டம்-அமல்




