சென்னை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. 2 தொகுதிகளிலும் தலைவர்கள் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. விஜய், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இந்தநிலையில் முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஒரே நாளில் 'ரோடு ஷோ' மூலம் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர். மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் நேற்று ரோடுஷோ நடத்தினார். இதற்காக நீலாங்கரை இல்லத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு காரில் புறப்பட்ட அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இரு பக்கத்திலும் திரண்டிருந்த தொண்டர்கள் விஜய் பயணித்த கார் மீது பூக்களை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாமண்டூர் சந்திப்பில் இருந்து 2.30 மணிக்கு முதல்-அமைச்சர் விஜய், 'ரோடு ஷோ'வை தொடங்கினார். திறந்தவெளி வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்தார். 40 இடங்களில் வாக்குசேகரிப்பு தொடர்ந்து புக்கத்துரை சந்திப்பு, பழையனூர் சந்திப்பு, படாளம் சந்திப்பு பகுதியில் ஏராளமானோர் திரண்டு இருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு பரிசு பொருட்களுடன் காத்திருந்த பொது மக்களுக்காக தனது வாகனத்தை நிறுத்திய முதல்-அமைச்சர் விஜய், அவர்களின் பரிசுகளை அன்புடன் பெற்றுக்கொண்டார். அவருக்கு செங்கோல், சாமி சிலைகள், எம்.ஜி.ஆர். அவரை ஆசிர்வதிப்பது போன்ற படங்கள், வேல், பூங்கொத்துகளை அவருக்கு வழங்கினர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் விஜய்யை காண அலை, அலையாய் மக்கள் கூட்டம் திரண்டு வந்தது. அவர்களை பார்த்தும் விஜய் விசில் ஊதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜானகிபுரம், கருங்குழி, அய்யனார் கோவில் சந்திப்பு, மாம்பாக்கம், முதுகரை சந்திப்பு, மேல்மருவத்தூர் கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம் சந்திப்பு, கீழ் அத்திவாக்கம், எலப்பாக்கம், மேளச்சேரி, தண்டலம் உள்பட 40 இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். எல்.எண்டத்தூரில் தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கிய அவர், அங்கிருந்த டீக்கடையில் டீ குடித்தார். அந்த ஊர் பெரியவர்களுடன் அமர்ந்து, சிறிது நேரம் உரையாடினார். டீக்கடைக்காரரிடம், 'டீ நன்றாக இருக்கிறது' என்று கூறினார். கிளியாநகர் பகுதியில் வானத்தை நிறுத்தி கீழே இறங்கிய முதல்-அமைச்சர் விஜய், அங்கு வயல்வெளியை ஆய்வு செய்தார். அந்த பகுதியில் நின்றிருந்த பெண்களிடம் விஜய் வாக்கு சேகரித்தார். செம்பூண்டி பகுதியில், மாற்று திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் வாங்கிக்கொண்டார். டிராக்டர் ஓட்டிய விஜய் ராமபுரம் பகுதியில் வயலில் உழவு பணி நடந்து கொண்டிருந்தது. இளைஞர் ஒருவர் டிராக்டர் ஓட்டி கொண்டிருந்தார். இதைபார்த்ததும் முதல்-அமைச்சர் காரில் இருந்து இறங்கி வயலுக்கு சென்றார். முதல்-அமைச்சரை பார்த்ததும் அந்த இளைஞர் டிராக்டரில் இருந்து இறங்கி வந்தார். அவரின் தோளில் தட்டி கொடுத்த விஜய், அந்த டிராக்டரில் ஏறி, டிராக்டர் ஒட்டினார். ஆணைக்குன்னம் பகுதியில் காரில் இருந்து இறங்கி வீடு, வீடாக விஜய் வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். இதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் விஜய், தன்னை ஆரத்தி எடுத்தவர்களுக்கு ஆரத்தி எடுத்தார். மதியம் 2.30 மணிக்கு தொடங்கி, 6.30 மணி வரை 4 மணி நேரம் வாகனத்தில் நின்று கொண்டே மக்களை அவர் சந்தித்தார். தேரடி தெருவில் அவர் தனது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார். மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ' திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தாராபுரம் அமராவதி சிலையில் இருந்து ரோடு ஷோ சென்று பிரசாரம் செய்தார். தாராபுரம் பெரிய கடைவீதி, பூக்கடை வீதி உள்பட முக்கிய பகுதிகள் வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை ரோடு ஷோ சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் தி.மு.க.வினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடுஷோவின் நடுவே வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய மு.க.ஸ்டாலின், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். தொண்டர்கள் வழங்கிய பரிசுகளையும் பெற்றுக்கொண்டார். அப்போது, தொண்டர்கள் கையில் வைத்திருந்த பலூன்களை மு.க.ஸ்டாலினை நோக்கி வீசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களாக 'ரோடு ஷோ' சென்றபோது வழியில் இறங்கிய மு.க.ஸ்டாலின் திடீரென வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் அங்கிருந்த மளிகைக்கடைக்கு சென்றார். அவர், மளிகைக்கடைக்காரரிடம் விலைவாசி குறித்து கேட்டறிந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் கூறுகையில், 4 மாதங்களுக்கு முன்பு இருந்த விலையில் இருந்து அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. அன்றாட சமையலுக்கு வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். 'ரீல்ஸ்' பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி. வருவாய் உயர்ந்து வரும் நிலையில், கடந்த 3 மாதங்களாக தமிழ்நாடு சரிவை சந்தித்து வருகிறது என்றார். எடப்பாடி பழனிசாமி தாராபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவு திரட்டுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரசாரம் செய்தார். இரவு 8 மணி அளவில் தாராபுரத்தில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் பணிமனை அலுலகத்தில் இருந்து வாகனத்தில் ரோடுஷோ சென்றார். உடுமலை சாலையில் இருந்து அலங்கியம் சாலை வழியாக தாராபுரம் நகர் முழுவதும் ரோடுஷோ சென்ற அவருக்கு வழி நெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஒருசிலர் செல்பியும் எடுத்துக்கொண்டனர். தாராபுரம் அண்ணா சிலை அருகே ரோடுஷோ நிறைவடைந்தது. இதையடுத்து அங்கு பொதுக் கூட்டம் நடந்தது. இதில், எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/campaigning-in-maduranthakam-and-dharapuram-constituencies-ends-tomorrow-leaders-on-an-intense-vote-seeking-drive




