சென்னை, உயிர்ம வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார். நம்மாழ்வார் விருதுகள் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை செ.நல்லசிவம், அ.சுப்பிரமணியன் மற்றும் சாதனா ஆகியோருக்கு வழங்கி சிறப்பித்தார். உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையிலும், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதில் சிறப்பாகச் செயல்பட்டு இதர உழவர்களையும் உத்வேகத்துடன் ஈடுபடச்செய்யும் உழவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026ஆம் ஆண்டில், உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ.நல்லசிவம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.சுப்பிரமணியன் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சாதனா ஆகியோருக்குத் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருதுகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் இன்று வழங்கிச் சிறப்பித்தார். நம்மாழ்வார் விருது பெற்றுள்ள செ. நல்லசிவம் அவர்கள் கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக இயற்கை இடுபொருட்களைக் கொண்டு சோளம், கரும்பு, மா, தென்னை மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்தும், இயற்கை வேளாண் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருவதோடு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும் வகையில் விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார். அ.சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 10 ஆண்டு காலமாக உயிர்ம வேளாண்மை முறையில் நெல் வகைகள், நிலக்கடலை, குறுமிளகு, தென்னை, வால்நட் போன்றவற்றைச் சாகுபடி செய்தும், அவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தும் வருகிறார். மேலும், 675-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை மற்றும் மதிப்புக்கூட்டுதல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சாதனா அவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக உயிர்ம வேளாண்மை முறையில் கம்பு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயிறு, வாழை, தென்னை, மா, பலா, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருவதுடன், சிறுதானியம் மற்றும் எண்ணெய் வகைகள் போன்றவற்றை மதிப்புக்கூட்டியும் விற்பனை செய்து வருகிறார். மேலும், 472-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உயிர்ம வேளாண்மை குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை செயலாளர் முனைவர் பொ.சங்கர், இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nammalvar-award-for-farmers-chief-minister-vijay-presented-the-award




