சேலம், நடிகர் அசோக்செல்வன், நடிகை பிரீத்தி முகுந்தன் நடிப்பில் அன்பில் அவன் திரைப்படம் தமிழகத்தில் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. திரைக்கு வந்த முதல் நாளிலேயே சேலத்தில் இந்த படத்தை திரையிட்ட ஒரு தியேட்டரில் வினோதமான பிரச்சினை ஏற்பட்டது. சேலத்தில் உள்ள ஷாப்பிங் மாலுடன் கூடிய தியேட்டர் ஒன்றில் நேற்று முன்தினம் இந்த படம் திரைக்கு வந்தது. காலைக் காட்சி வழக்கம் போல் ஓடிய நிலையில், 2-வது காட்சி மாலை 3.45 மணிக்கு திரையிடப்பட்டது. 'டைட்டில் கார்டு' எதுவுமே போடாமல் படம் ஓடத்தொடங்கியது. சரி இயக்குனரின் புதுவித முயற்சியோ என்று தியேட்டரில் இருந்த ரசிகர்களும் படத்தை தொடர்ந்து பார்த்தனர். ஒரு சிலரோ என்னப்பா கதையே சற்று புரியலை என்ற குழப்பத்துடன் பார்த்தனர். இடைவேளை நேரத்தில்தான் படத்தின் 'கிளைமாக்ஸ்' காட்சி ஓடியதுடன், படத்தின் முடிவில் பெயர்களுடன் வரும் 'என்ட் கார்டு' ஓடியதை கண்டு தியேட்டரில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போதுதான் கதையின் தொடக்கத்திற்குப் பதிலாக, படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் இரண்டாம் பாதியுடன் படம் திரையிடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து திரையரங்க ஊழியர்களிடம், ரசிகர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படத்தின் 2-வது பாதியை பார்த்து விட்டு முதல் பாதியை எப்படி பார்ப்பது என்று வெறுப்படைந்த ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுக்குரிய பணத்தை திரும்ப தருமாறு முறையிட்டனர். சிலர் முன்பதிவுக்கான கூடுதல் கட்டணத்துடன் கூடிய பணத்தை முழுவதுமாக திருப்பி தர வேண்டும் என்றும் தியேட்டர் ஊழியர்களிடம் முறையிட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அடுத்த காட்சிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு தாமதம் ஏற்படும் என்பதை உணர்ந்த தியேட்டர் நிர்வாகம், தவறுக்கு வருத்தம் தெரிவித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு தியேட்டர் நிர்வாகத்தினர் டிக்கெட்டுக்கு உரிய முழுப்பணத்தையும் கொடுத்தனர். இதனால் படத்தின் முதல் பாதி காட்சி திரையிடப்படாமல் அடுத்த காட்சி அந்த திரையரங்கில் திரையிடப்பட்டதாக இடைவேளையில் பணத்தை திரும்ப பெற்ற ரசிகர்கள் கூறினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/confusion-as-anbil-avan-2nd-half-screened-first-in-salem-theater-management-refunds-ticket-fees


