திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆதிகுடி எனும் ஊரில் அமைந்துள்ளது அங்குரேஸ்வரர் திருக்கோவில். சனி பகவான் தனது குறை நீங்கப் பெற்ற தலம், அகத்தியரால் வழிபடப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளை பெற்று இக்கோவில் விளங்குகிறது. சனி பசுவான் ஒரு சமயம் எம மூர்த்தியின் தண்டத்தால் கால் ஊனம் அடைந்தார். தன்னுடைய கால் ஊனம் நீங்கப் பெற, சனி பகவான் பல ஆலயங்களுக்கு சென்றும், புனித தீர்த்தங்களில் நீராடியும் வழிபட்டார். இறுதியில் இங்குள்ள பிரேமாம்பிகை சமேத அங்குரேஸ்வரர் ஆலயத்தில் வழிபட்ட பிறகே, தன்னுடைய ஊனம் நீங்கப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. இங்கு வந்து வழிபட்டால் பக்கவாதம், உடல் ஊனம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் விரைவில் குணமடைவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தல சிறப்பு ஒரு காலத்தில் இவ்விடம் அடர்ந்த புதர்களும், புல்வெளிகளும் நிறைந்து காணப்பட்டது. இப்பகுதியில் 'விமலன்' என்ற மாடு மேய்க்கும் சிறுவன் வாழ்ந்து வந்தான். பிறவியிலேயே ஒரு கை, கால் ஊனமுற்றவனாக இருந்த அவன், தினந்தோறும் மாடுகளை புல்வெளிக்கு ஓட்டிச் சென்று வந்தான். ஒரு நாள் வழக்கம்போல் அவன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, பசுக்கூட்டத்திலிருந்த பசு ஒன்று. ஓரிடத்தில் தானாக பால் சொரிந்து கொண்டிருப்பதை பார்த்தான். இதைக் கண்டு வியந்த அவன், அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக மண் வெட்டியால் அந்த இடத்தை செதுக்கினான். உடனே, அவ்விடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அதைப் பார்த்து பயந்துபோன விமலன். ஊருக்குள் ஓடிச் சென்று, அங்கிருந்த மக்களிடம் தான் பார்த்த அதிசயத்தை கூறினான். அதைக் கேட்ட ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, ஓடி வந்து அந்த அற்புதத்தை பார்த்தனர். மேலும் அவ்விடத்தில் மண்வெட்டியால் (அங்குரம்) தோண்டிப் பார்த்தபோது, அழகிய லிங்கம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அவரே 'அங்குரேஸ்வரர்" என அழைக்கப்பட்டார். பின்னர், சோழர் காலத்தில் இங்கு ஆலயம் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அக்கோவிலே, அங்குரேஸ்வரர் கோவிலாக இன்றளவும் காட்சி தருகிறது. அங்குரேஸ்வரர், பிரேமாம்பிகை கோவில் அமைப்பு இந்த ஆலயம், முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் முகப்பில் விநாயகர், முருகன் இருபுறமும் அருள்பாலிக்க, பார்வதி -பரமேஸ்வரன் ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் கதை சிற்பம் வரவேற்கிறது. பிரகாரத்தில் பலிபீடம், நந்தியம் பெருமானை வணங்கி, துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று மகா மண்டபத்தில் நுழைந்தால் அங்கே இடதுபுறத்தில் அர்த்தமண்டப நுழைவாசலில் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மூலவரான அங்குரேஸ்வரர் சுயம்புலிங்கமாக தரிசனம் தருகிறார். எதிரில், தென் திசை நோக்கி கருணையே வடிவாக பக்தர்களுக்கு சாந்த சொரூபியாக பிரேமாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்மனையும், அப்பனையும் மகா மண்டபத்தில் ஒருசேர தரிசிக்கலாம். தம்பதிகள் இந்த தலத்திற்கு வருகை தந்து, பிரேமாம்பிகை அம்மனையும், அங்குரேஸ்வரரையும் வழிபட்டால் இருவருக்குமிடையே உள்ள அன்பும், காதலும் அதிகரித்து, குடும்ப ஒற்றுமை மேலோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. சுவாமி, அம்பாள் தரிசனத்தை தொடர்ந்து தென்புறம் இருக்கும் தட்சிணாமூர்த்தியையும். கிழக்கில் இருக்கும் மகாவிஷ்ணுவையும், வடக்கில் இருக்கும் துர்க்கையை வழிபடலாம். மேலும் இக்கோவிலில் மகா கணபதி, சண்முகநாதர், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டிகேஸ்வார், நவக்கிரகங்கள் ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. ஆலயத்தின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. தென்திசை நோக்கி அருள்பாலிக்கும் அங்குரேஸ்வரர் ஆலயத்திற்கு எதிரில் மயானம் உள்ளது. திருவாஞ்சியம், ஆதிகுடி என்ற இரு தென்தமிழக சிவ தலங்களில் மட்டுமே சுடுகாடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வழிபாடு இக்கோவில் காசிக்கு இணையான தலமாக கருதப்படுவதால், நீத்தார் கடன் செய்ய உகந்த திருத்தலமாகும். உடல் சார்ந்த குறைபாடு உடையவர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களும், விபத்தினால் ஊனமுற்றவர்களும் அபிஷேகம் செய்து வழிபட்டால் அங்குரேஸ்வரர் உடல் ஊனத்தை மட்டுமல்லாமல், மன ஊனத்தையும் போக்குவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், சனி தோஷம் நீங்கவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். இக்கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடி வெள்ளி, தீபாவளி, தைப்பொங்கல், மாத பிரதோஷம், மாத சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை சோமவாரம் போன்ற விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அமைவிடம் திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் ஆதிகுடி அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து அன்பில் செல்லும் பேருந்தில் ஏறி ஆதிகுடி சென்றடையலாம். லால்குடியில் இருந்து நேரடியாக அன்பில் செல்லும் பேருந்தின் மூலமாகவும் ஆதிகுடியை அடையலாம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/aalaya-varalaru/athikudi-angureswarar-temple-tiruchirappalli-district




