பாண்டவர்கள் தவம் செய்த தலம், சித்தர்கள் சூட்சும வடிவில் அருள்பாலிக்கும் தலம் என பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது, கொண்டரங்கி மலை. மலையே சிவனாக. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கீரனூரில் அமைந்துள்ளது, கொண்டரங்கி மலை. இது, இயற்கையான சிவலிங்க வடிவத்தைக் கொண்ட ஆன்மிக மற்றும் மலையேற்றத் தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 3825 அடி (1165 மீட்டர்) உயரம் கொண்ட இம்மலையின் உச்சியில் மல்லிகார்ஜூனர் என்ற பெயரில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிகிறார். இந்த மலையே ஒரு பெரிய சிவலிங்கம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இதனால் திருவண்ணாமலையைப் போலவே, மலையை சிவலிங்கமாக வழிபடுகிறார்கள். இங்கு சித்தர்கள் தவம் செய்த குகைகள் உள்ளன. பாண்டவர்கள் குகைகள் அமைத்து சிவனை வழிபட்டதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. மலை அடிவாரத்தில் கெட்டி மல்லீஸ்வரர் மற்றும் பிரமராம்பிகை கோவில்கள் அமைந்துள்ளன. சவாலான மலையேற்றம் மலை உச்சியை அடைய சுமார் 2 மணி நேரம் மலையேற வேண்டும். செங்குத்தான, சவாலான பாறைப் பாதைகளில் ஏறுவதற்கு வசதியாக படிக்கட்டுகளும், கைப்பிடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மழை அல்லது பலத்த காற்று வீசும் காலங்களில் மலை ஏறுவது கடினமான ஒன்றாகும். வெயிலைத் தவிர்க்கவும், பாதுகாப்பாக மலையேறவும் அதிகாலை நேரத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மலை உச்சியில் சுயம்பு லிங்க வடிவில் காட்சி தரும் மல்லிகார்ஜூன சுவாமியை வழிபட்டால் முக்தியும், மோட்சமும் பெறலாம் என்பது நம்பிக்கை. முனிவர்கள் தவம் செய்த தலம் ஒரு சமயம் காகபஜேந்திரன், கணபதி என்ற இரண்டு துறவிகள் தங்களின் முன்வினை காரணமாக காகங்களாக பிறந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இந்த மலையில் தங்கியிருந்து ஈசனை வழிபட்டு தவம் இருந்ததாக சொல்லப்படுகிறது. காகபஜேந்திர முனிவருக்காக மலையின் உச்சியில் ஒரு சிறிய குகைக் கோவில் அமைந்துள்ளது. அந்தி வேளையில் காகபஜேந்திர முனிவர், லேசான புயல் வடிவில் இங்குள்ள சிவபெருமானை வணங்குவதாக கூறப்படுகிறது. தோல் நோய் தீர்க்கும் தீர்த்தம் மலை உச்சியில் ஒரு வற்றாத நீரூற்று காணப்படுகிறது. அதில் இருந்து எடுக்கப்படும் நீரில்தான் சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம், பூஜைகள் செய்யப்படுகிறது. இந்நீரே பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை தெளித்துக்கொண்டால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆங்கிலேய ஆட்சியின்போது, எல்லைகளை மீட்டெடுக்க ஒரு வரைபடத்தை உருவாக்க அவர்கள் முடிவு செய்தனர். இந்த வரைபடம், சிதைந்த இடங்களைக் கண்டறிய மூன்று அணுகல் புள்ளிகளைக் கொண்டிருந்தன. அவை மூன்று மலைகளான கொடைக்கானல் மலை, திருமலை மலை, கொண்டரங்கி மலை ஆகும். இதை உள்ளூர்வாசிகள் 'மல்லிசுவர் மலைகள்' என்று அழைத்தனர். இந்த ஆங்கிலேய கட்டமைப்பு 'முக்கோண ஆய்வு' என்று அழைக்கப்படுகிறது. கடுமையான நிலநடுக்கத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் புதிய எல்லைகளைப் உருவாக்க இந்த ஆய்வு பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டது. கொண்டரங்கி மலை திருவிழா- வழிபாடுகள் இந்த இடம் முனிவர்களும், மகரிஷிகளும் தியானம் செய்வதற்கான முதன்மையான தலமாக இருந்து வந்துள்ளது. இன்றும் அரூப வடிவில் சித்தர்கள் பலர் இங்கு தவம் இருப்பதாகவும், இங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் காட்சி தந்து அருள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மன அமைதி வேண்டி வரும் பக்தர்கள் வழிபட வேண்டிய ஏற்ற தலம் இதுவாகும். மகா சிவராத்திரியும், சித்ரா பவுர்ணமியும் இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தரிசன நேரம் கோவில் காலை 8.30 மணி முதல் 11.30 வரை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். மார்கழி மாதம் அதிகாலை வேளையிலே கோவில் நடை திறந்திருக்கும். ஆனால் வழக்கமான நேரமான காலை 11.30 மணிக்கு நடை சாற்றப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிறு, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கோவில் பிற்பகல் 1.30 மணி வரை திறந்திருக்கும். ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவிலும், தாராபுரத்தில் இருந்துசுமார் 32 கிலோமீட்டர் தொலைவிலும் மல்லிகார்ஜூன சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/spiritual-significance-of-kondarangi-hill



