கான்பெர்ரா, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பிரபல சிப்பி பண்ணையிலிருந்து, சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடி ரூபாய்) மதிப்புள்ள 4,00,000 சிப்பிகளை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிட்ட கொள்ளை ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சிட்னி நகருக்கு வடக்கே அமைந்துள்ள 'தாரீ' என்ற பகுதிக்கு அருகில் உள்ள மான்னிங் ஆற்றில் 'லாடிடியூட் 31 ஆய்ஸ்டர்ஸ்' என்ற சிப்பி பண்ணை இயங்கி வருகிறது. அதன் உரிமையாளர் ரையன் ப்ரீமேன். திருடர்கள் திட்டமிட்டபடி நள்ளிரவில் படகுகள் மூலமாக வந்து, பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த உயர்தர சிப்பியான சிட்னி ராக் ஆய்ஸ்டர்ஸ் சிப்பிகள் மற்றும் பிற உபகரணங்களையும் திருடிச் சென்றனர். 320 மூட்டைகளில் அள்ளப்பட்ட சிப்பிகள் பண்ணையில் அறுவடைக்குத் தயாராக, தனித்தனி மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த சிப்பிகளைத் திருடர்கள் குறிவைத்துள்ளனர். 300-க்கும் மேற்பட்ட பெரிய மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 4 லட்சம் சிப்பிகளை அவர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். தாமதமாக வெளிவந்த உண்மை வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கால விற்பனைக்காக சிப்பிகளைத் தயார் செய்ய, உரிமையாளர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை பண்ணைக்குச் சென்றுள்ளார். அப்போது பண்ணையில் இருந்த சிப்பிகள் மற்றும் உபகரணங்கள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இது அந்தப் பண்ணையின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்த இழப்பால் பண்ணை உரிமையாளர் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நடந்துள்ளது. எனினும், பண்ணையில் உள்ள சிப்பிகளின் இருப்பை மறுமதிப்பீடு செய்து, திருட்டுப் போனதை முழுமையாக உறுதிப்படுத்திய பிறகே, போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணை இந்த மாபெரும் கொள்ளை குறித்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான சிப்பிகளைத் தனியாக விற்க முடியாது என்பதால், சிப்பி வியாபாரத்தில் தொடர்புடைய நபர்களின் பின்னணி குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், திருடப்பட்ட சிப்பிகள் சட்டவிரோத சந்தையிலோ அல்லது உணவகங்களிலோ விற்கப்படலாம் என்பதால், சந்தேகத்திற்கிடமான சிப்பி விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாகத் தெரிவிக்குமாறு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/australia-gang-steals-oysters-worth-240-crore-from-farm



