வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் மருத்துவ வரலாற்றில் சில சாதனைகள் காலத்தைக் கடந்து நிலைத்திருக்கின்றன. பெண்கள் மருத்துவக் கல்வியில் நுழைவதே சவாலாக இருந்த 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மயக்க மருந்தியல் துறையில் உலகின் முதல் தகுதிபெற்ற பெண் நிபுணராக இந்தியாவின் டாக்டர் ரூபா பாய் ஃபர்தூஞ்சி வரலாற்றில் தனியிடம் பெற்றார். பெண்கல்வி மற்றும் முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவாக இருந்த பார்சி சமூகத்தைச் சார்ந்த ஒரு ஐதராபாத் குடும்பத்தில் ரூபா பாய் ஃபர்தூஞ்சி பிறந்தார். பெற்றோரின் பெயர்கள், உடன்பிறந்தவர்கள், பிறந்த தேதி, ஆண்டு மற்றும் பள்ளிக்கல்வி குறித்த அதிகாரப்பூர்வமான ஆவணப் பதிவுகள் கிடைக்காத நிலையில், 1885 -ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததை அடிப்படையாக வைத்து 1860-களில் ரூபா பாய் பிறந்திருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. 1885-ஆம் ஆண்டு ஐதராபாத் மருத்துவப் பள்ளியில் (தற்போதைய உஸ்மானியா மருத்துவக் கல்லூரி) மருத்துவக் கல்வியைத் தொடங்கிய ஐந்து பெண் மாணவிகளில் ரூபா பாயும் ஒருவர். மேற்கத்திய மருத்துவ முறைகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்ட மருத்துவக் கல்வியில் உடற்கூறியல், உடலியல், அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட பாடங்களைப் பயின்ற ரூபா பாய், 1889ஆம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை நிறைவு செய்து ‘ஹக்கீம்’ என்ற பட்டத்தைப் பெற்றார். ‘ஹக்கீம்’ என்ற பெயர் யுனானி மருத்துவத்துடன் தொடர்புடையதாகத் தோன்றினாலும், நிஜாம் ஆட்சிக்கால ஐதராபாத்தில் மேற்கத்திய மருத்துவக் கல்வியை முடித்தவர்களுக்கும் ஹக்கீம் பட்டம் தான் வழங்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. மயக்க மருந்தியல் தனித்த துறையாக வளர்ச்சி பெறாத அக்காலத்தில் அறுவைச் சிகிச்சை மருத்துவர்களே மயக்க மருந்தையும் வழங்கினர். இத்தகைய சூழலில், மயக்க மருந்து வழங்குதலைத் தனது முதன்மைப் பணியாகத் தேர்ந்தெடுத்து, அதில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் பெற்ற ரூபா பாய் உலகின் முதல் பெண் மயக்க மருந்து நிபுணராக உருவானார். 1888 மற்றும் 1891-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐதராபாத் குளோரோஃபார்ம் ஆணையத்தின் ஆய்வுகளில், குளோரோஃபார்ம் மயக்க மருந்தின் பாதுகாப்பான பயன்பாடு, குறிப்பாக சுவாசம், இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவற்றின் மீதான அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ரூபா பாயும் இவ்வாய்வுகளில் பங்கேற்றார். இவ்வாய்வுகளின் முடிவுகள் தி லான்செட் உள்ளிட்ட மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டன. மயக்க மருந்தியலுக்கென தனிப்பட்ட பட்டப்படிப்பு, சிறப்புப் பயிற்சி உருவாகாத காலத்தில் அறுவைச் சிகிச்சையில் மயக்க மருந்து அறிவியலை ஆழமாகப் புரிந்துகொள்ள ஸ்காட்லாந்துக்குப் பயணம் செய்தார். 1909-ஆம் ஆண்டு மும்பையிலிருந்து கப்பலில் ஸ்காட்லாந்துக்குப் பயணம் செய்த போது அதே கப்பலில் பயணம் செய்த அன்னி பெசன்ட், ரூபா பாயின் மருத்துவ ஆர்வத்தைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தியதுடன், அவருக்கு உதவுமாறு எடின்பர்க்கில் தனக்கு அறிந்தவரான திருமதி.டிரம்மாண்டுக்கு பரிந்துரை கடிதம் வழங்கினார். மயக்க மருந்துகளின் வேதியியல் இயல்பையும் அவற்றின் செயல்பாட்டில் வாயுக்கள், அழுத்தம் போன்ற அறிவியல் கூறுகளின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற ரூபா பாய் இயற்பியல் மற்றும் வேதியியலில் பட்டயம் பெற்றார். பெண்களுக்கு உயர்கல்வி மற்றும் மருத்துவப் பயிற்சிக்கான வாய்ப்புகள் பல இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவில் தொடங்கி, ஐரோப்பாவில் தொடர்ந்த அவரது கல்வி பயணம் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையைச் சென்றடைந்தது. ரூபா பாய் 1889 முதல் 1917-ஆம் ஆண்டு வரை ஐதராபாத்தில் உள்ள பிரிட்டிஷ் ரெசிடென்சி மருத்துவமனை, அப்சல்கஞ்ச் மருத்துவமனை, விக்டோரியா ஜெனானா மகப்பேறு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் பணியாற்றினார். மயக்க மருந்தின் பாதுகாப்பு குறித்து மருத்துவ உலகில் விவாதங்கள் நிலவிய அக்காலத்தில், மயக்க மருந்து வழங்கும் பணியில் மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் அறிவியல் அடிப்படையிலான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளின் மூலம் அதன் பயன்பாட்டை மேம்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். 1920-ஆம் ஆண்டு ஐதராபாத்திலுள்ள சாதர்காட் மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு, அவர் எங்கு வாழ்ந்தார், எப்போது மறைந்தார் போன்ற எந்தவொரு தகவலும், புகைப்படங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இல்லை. அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் போலவே அவரது பிற்கால வாழ்க்கையும் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. ரூபா பாய் ஓய்வு பெற்ற பின்னர், அவரது உறவினரான ஹர்முஸ்ஜி காவ்ஸ், அவருடைய மூன்று அசல் சான்றிதழ்களையும் சில தனிப்பட்ட கடிதங்களையும் பாதுகாத்து வைத்திருந்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவ வரலாற்று அறிஞர் டாக்டர்.நாராயணா ஆலா, வெளியிட்ட குளோரோஃபார்ம் ஆணையம் குறித்த வரலாற்று கட்டுரையில் வெளியான குழு புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில் இடம்பெற்றிருந்த இந்தியப் பெண்மணி ரூபா பாய் என்பதும் அடையாளம் காணப்பட்டது. இதன் பின்னர் ஹர்முஸ்ஜி காவ்ஸ் தன்னிடம் பாதுகாப்பாக இருந்த ரூபா பாயின் சான்றிதழ்களையும் கடிதங்களையும் நாராயணாவிடம் ஒப்படைத்தார். பின்னர் அவை ஐதராபாத்திலுள்ள இந்திய மருத்துவ மரபியல் தேசிய நிறுவனத்தின் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டன. மீட்கப்பட்ட ஆவணங்களில் குளோரோஃபார்ம் ஆய்வுகளில் ரூபா பாய் பங்கேற்றதைப் பதிவு செய்த எட்வர்ட் லாரியின் சான்றிதழ், நோய்நாடலியல் கல்விக்கான சான்றிதழ், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பெற்ற கல்வித் தகுதிக்கான சான்றிதழ், அன்னி பெசன்ட் வழங்கிய பரிந்துரைக் கடிதம் மற்றும் ஏடன் துறைமுகத்தில் இருந்து எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1987-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சர்வதேச மயக்க மருந்து வரலாற்று மாநாட்டின் குறிப்புகளோடு இந்த ஆவணங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்ட பிறகே, ரூபா பாய் உலகின் முதல் தகுதிபெற்ற பெண் மயக்க மருந்து நிபுணர் என்ற வரலாற்றுச் சிறப்பு பரவலாக வெளிச்சத்துக்கு வந்தது. ஐதராபாத்தில் தொடங்கி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரை தொடர்ந்த ரூபா பாய் ஃபர்தூஞ்சியின் அறிவுத்தேடல், அவரது விடாமுயற்சியையும் மருத்துவ முன்னோடிப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது. காலத்தால் மறைக்கப்பட்ட அவரது வரலாற்றை ஆவணங்கள் மீண்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தின. வரலாறு, வரலாற்றை மீட்டெடுத்திருக்கிறது. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம். இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே. Link: விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம். உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/literature/the-forgotten-story-of-the-worlds-first-female-anesthetist




