சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் கள நிலவரம் எப்படி இருக்கிறது? என்பதை பற்றி பார்ப்போம். தேர்தல் அரசியல் நகர்வு 'ஆட்சி' மாறினால் 'காட்சி'யும் மாறும் என்று பொதுவாக அரசியலில் சொல்வார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே இந்தத் தேர்தலின்போது அரசியல் நகர்வுகளும் இருந்தன. புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்காததால், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் அரியணை ஏறியது. 7 தொகுதிகள் காலியானது இதைத் தாண்டி, அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் த.வெ.க. ஆட்சியமைக்க வெளிப்படையாக ஆதரவு அளித்தனர். இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), டாக்டர் விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 பேர் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால், அந்த 6 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியானது. இதில், திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகளின் தேர்தல் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்க உள்ள நிலையில், மேற்கண்ட 2 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதி கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 4 முனைப்போட்டி நிலவியது. மதுராந்தம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் அமுலு பொன்மலர், அ.தி.மு.க. சார்பில் மரகதம் குமரவேல், த.வெ.க. சார்பில் எழில் கேத்தரின், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 1 லட்சத்து 96 ஆயிரத்து 268 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், த.வெ.க. வேட்பாளர் எழில் கேத்தரின் 62,090 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 7,194 வாக்குகள் ஆகும். தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமன் 4,950 வாக்குகள் பெற்றார். தாராபுரம் தொகுதி இதேபோல், தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. சார்பில் இந்திராணி, அ.தி.மு.க. சார்பில் சத்யபாமா, த.வெ.க. சார்பில் கவுரி சித்ரா, நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யா ஆகியோர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 944 வாக்குகளில், அ.தி.மு.க. வேட்பாளர் சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில், தி.மு.க. வேட்பாளர் இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2-வது இடம்பிடித்தார். இருவருக்குமான வித்தியாசம் 16,727 வாக்குகள் ஆகும். த.வெ.க. வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகள் பெற்றார். யாருக்கு வெற்றி வாய்ப்பு? கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்) ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலை எதிர்க்கட்சியான தி.மு.க. புறக்கணிக்கும் என்று கூறப்படும் நிலையில், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண இருக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட த.வெ.க.வுக்கு தற்போது செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக, இரு பெண் வேட்பாளர்களுக்கும் தொகுதியில் சொந்த செல்வாக்கு அதிகம் இருப்பதால், நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவு இடைத்தேர்தல் வெற்றி என்பது கூட்டணி ஆட்சி நடத்தி வரும் த.வெ.க.வுக்கு முக்கிய தேவை என்பதால், தேர்தல் முடிவு இப்போதே பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/maduranthakam-and-dharapuram-constituencies-facing-by-elections-what-is-the-ground-situation




